×

கிண்டி, மீனம்பாக்கத்தில் கோடை வெயில் உக்கிரத்தில் 2 இடங்களில் தீ விபத்து

ஆலந்தூர்: கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய 2 பகுதிகளில் நேற்று கோடை வெயிலின் உக்கிரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் மிகப்பெரிய இழப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டது. சென்னை கிண்டி அருகே ஈக்காட்டுதாங்கலில் ஜான்பால் என்பவர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவரது ஒர்க்‌ஷாப் மதில்சுவரை ஒட்டி ஏராளமான மரக்கழிவுகள் உள்பட பல்வேறு குப்பைக் கழிவுகள் தேங்கி கிடந்தன. இதன் அருகே ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரும் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்ததில், மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்தது. அதிலிருந்து வெளியான தீப்பொறிகள், அங்குள்ள குப்பைக் கழிவுகளில் விழுந்ததால் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும், அங்கு நின்றிருந்த 2 பைக்குகளும் தீப்பிடித்து எரிந்தன.

இதுகுறித்து தகவலறிந்ததும் கிண்டி காவல்நிலைய ஆய்வாளர் பிரபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அங்கு குப்பைக் கழிவுகளில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் அங்கு அதிகளவில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல், மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கன்டோன்மென்ட் நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் ஏராளமான முட்புதர் காடுகள் உள்ளன. கோடை வெயிலின் உக்கிரத்தில், இங்குள்ள மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து கிடக்கின்றன. இந்நிலையில், நேற்று மாலை வெயிலின் உக்கிரத்தினால் முட்புதர் காடுகள் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. மேலும், சுற்றுப்புற பகுதிகளிலும் தீ பரவும் அபாயநிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மீனம்பாக்கம் போலீசார் மற்றும் தாம்பரம், தி.நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே முட்புதர் காடுகளில் பரவியிருந்த தீயை சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதனால் அங்கு பெருமளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மீனம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் மேற்கண்ட 2 பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

The post கிண்டி, மீனம்பாக்கத்தில் கோடை வெயில் உக்கிரத்தில் 2 இடங்களில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Guindy, Meenambakkam ,Alandur ,Guindy ,Meenambakkam ,Janpal ,Ekatuthangal ,Guindy, Chennai ,Meenambakkam, Guindy ,
× RELATED கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன்...