×

பெட்ரோல் நிலையத்திற்கு செல்ல வசதியாக புழல்-அம்பத்தூர் சாலையில் உள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

புழல், ஆக. 12: தடுப்புச்சுவரை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கைவைத்துள்ளனர். தமிழக சிறைத்துறை சார்பில், பெண் கைதிகளின் பராமரிப்பில் 2வது பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் புழல்-அம்பத்தூர் சாலையில் துவக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்க்கின் முன்புள்ள சாலையோர தடுப்புச்சுவரை அகற்றினால் மட்டுமே உள்ளே வாகனங்கள் வந்து செல்ல முடியும். அந்த தடுப்பு சுவரில் குறிப்பிட்ட பகுதி வரை அகற்றி வழி ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை புழல் மத்திய சிறையை ஒட்டிய புழல்-அம்பத்தூர் மாநில நெடுஞ்சாலையில், சிறைத்துறை அதிகாரிகளின் குடியிருப்பு அருகே நேற்று தமிழக சிறைத்துறை சார்பில் 2வது பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை பெண் கைதிகளின் பராமரிப்பில் நடத்தி வருகின்றனர். எனினும், இந்த பெட்ரோல் நிலையத்தில் பலர் தங்களின் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்ப நீண்ட தூரம் சுற்றிவர வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏனெனில், இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் முன்புறம் உள்ள மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பல்வேறு வாகன ஓட்டிகள் நேரடியாக செல்ல முடியாமல் நீண்ட தூரம் அலையவேண்டியுள்ளது. இதனால் பெண் சிறைக் கைதிகள் நடத்தும் பெட்ரோல் நிலையத்தில் அதிகளவு விற்பனை குறையும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. புழல்-அம்பத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சிறைத்துறையின் பெட்ரோல் நிலையத்தை தவிர, வேறெந்த தனியார் பங்க்கும் அருகில் இல்லை. இதனால் அவ்வழியே சென்று வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அம்பத்தூருக்கோ அல்லது புழல் பகுதிக்கோ சென்று பெட்ரோல் போடும் அவலநிலை உள்ளது. இதேபோல்தான் லாரி உள்ளிட்ட பல்வேறு கனரக வாகனங்களும் டீசலை நிரப்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, புழல்-அம்பத்தூர் சாலையில் பெண் சிறைக் கைதிகளால் நடத்தப்பட்டு அரசு பெட்ரோல் நிலையத்தின் முன்பு உள்ள தடுப்பு சுவரில் குறிப்பிட்ட பகுதிவரை இடித்து அகற்றினால், அவ்வழியே இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் உள்ளே சென்று பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு வசதியாக இருக்கும். இதனால் அந்த பெட்ரோல் பங்க்கின் வருவாயும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த தடுப்பு சுவரை உடைத்து வழி ஏற்படுத்தி தருவதற்கு சிறை மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

The post பெட்ரோல் நிலையத்திற்கு செல்ல வசதியாக புழல்-அம்பத்தூர் சாலையில் உள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puzhal-Ambattur ,Puzhal ,Tamil Nadu Prison Department ,Puzhal-Ambattur road ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...