×

ஆற்காடு அருகே பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் படியில் தொங்கியதால் 3 அரசு பேருந்துகள் பாதி வழியில் நிறுத்தம்

 

*போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை

ஆற்காடு : ஆற்காடு அருகே பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து படியில் பயணம் செய்த மாணவர்களால் 3 அரசு பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்காடு அடுத்த புதுப்பாடி எம்ஜிஆர் நகர் இலுப்பை ரோடு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 3 அரசு டவுன் பஸ்களை அதன் டிரைவர்கள் தொடர்ந்து இயக்காமல் பாதி வழியிலேயே நிறுத்தி உள்ளனர். இது குறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், 3 அரசு டவுன் பஸ் படிக்கட்டுகளில் அதிக அளவு மாணவர்கள் தொங்கியபடி வந்துள்ளனர்.

அதன் டிரைவர்கள் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து படியில் பயணம் செய்ததால் அந்த 3 பஸ் டிரைவர்களும் பேருந்தை தொடர்ந்து இயக்காமல் நிறுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார் தொடர்ந்து பஸ்ஸை ஓட்டி செல்லுமாறு அதன் டிரைவர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து 3 டவுன் பஸ்களும் தொடர்ந்து இயக்கப்பட்டது. படியில் தொங்கியபடி பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் தொடர்ந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் மாணவர்களும், பொதுமக்களும் அதிக அளவு படிகளில் தொங்கியபடி செல்லும் அவலநிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மேற்கண்ட அவலநிலை தொடராமல் தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆற்காடு அருகே பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் படியில் தொங்கியதால் 3 அரசு பேருந்துகள் பாதி வழியில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : government ,Arcot ,Artgad ,Dinakaran ,
× RELATED சென்னையை தொடர்ந்து கடலூரிலும்...