×

சென்னையை தொடர்ந்து கடலூரிலும் தியேட்டரில் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தாசில்தார் உடனடி நடவடிக்கை

கடலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள லாடபுரம் எம்ஜிஆர் நகரில் 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஊர் ஊராக சென்று பாத்திரங்கள் விற்பனை மற்றும் சிக்கு முடி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கடலூர் வந்த இவர்கள் நியூ சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்திற்கான டிக்கெட் கேட்டுள்ளனர். அப்போது டிக்கெட் கவுண்டரில் இருந்த ஊழியர்கள், டிக்கெட் கொடுக்க மறுத்ததுடன் அவர்களை வெளியே செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் இது குறித்து கடலூர் கோட்டாட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுரை வழங்கினர். இதையடுத்து நரிக்குறவர்கள் நேராக கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு கோட்டாட்சியர் இல்லை. இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் தாசில்தார் பலராமன், கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து நரிக்குறவர்களிடமும், தியேட்டர் உரிமையாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிப்பதாக தியேட்டர் உரிமையாளர் கூறினார். இதையடுத்து தாசில்தார், தனது காரிலேயே சிலரை தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். மற்றவர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதன் பிறகு அவர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு அனைவரும் தியேட்டருக்கு உள்ளே சென்று திரைப்படத்தை பார்த்தனர். இந்த சம்பவத்தால் கடலூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சென்னையில் உள்ள ஒரு தனியார் தியேட்டரிலும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்களை திரைப்படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

The post சென்னையை தொடர்ந்து கடலூரிலும் தியேட்டரில் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தாசில்தார் உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cuddalore ,Tehsildar ,Ladhapuram MGR ,Arcot ,Ranipet district ,
× RELATED 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண்...