×

சாமியாடிய பக்தர் சொன்ன அருள்வாக்குபடி மண்டபத்தை தோண்டியபோது முருகரின் கற்சிலை கிடைத்தது: திருத்தணி அருகே பரபரப்பு

திருத்தணி: திருத்தணி அடுத்த அகூர் ஊராட்சிக்கு உட்பட்டது நத்தம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு மண்டபம் உள்ளது. ஆண்டுதோறும் திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா ஆகிய நாட்களில் வேலூர், குடியாத்தம், திருவண்ணாமலை, ஆம்பூர் மற்றும் சேலம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் இந்த மண்டபத்துக்கு வந்து தங்கிவிட்டு பின்னர் முருகன் கோயில் தெப்பக் குளத்தில் புனித நீராடிவிட்டு மலைக் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

இந்த நிலையில், நேற்று ஆடி பரணி விழாவையொட்டி மேற்கண்ட பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து இந்த மண்டபத்தில் தங்கியிருந்தனர். அப்போது ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஒரு பக்தருக்கு திடீரென சாமிவந்து அருள்வாக்கு கூறினார். அப்போது அந்த பக்தர், ‘’ இந்த மண்டபத்தில் முருகர் சிலை உள்ளது என்று கூறியதுடன் அந்த இடத்தையும் காண்பித்தார். இதன்படி அந்த பகுதியில் கிராம மக்கள் தோண்டியபோது சுமார் இரண்டரை அடி நீளம், உயரம் கொண்ட முருகர் கற்சிலை கிடைத்தது.

இதனால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். உடனடியாக அந்த சிலையை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர். பின்னர் விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் திருத்தணி, அகூர்-நத்தம், கோரமங்கலம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து முருகரை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் வந்துகொண்டிருந்ததால் கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து திருத்தணி தாசில்தார் மதன் மற்றும் போலீசார் வந்து கற்சிலையை மீட்டு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ‘’சிலையை தர மாட்டோம், நாங்கள் இங்குவைத்து வழிபடுவோம்’’ என்று கூறிவிட்டனர். இதையடுத்து கிராம மக்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

The post சாமியாடிய பக்தர் சொன்ன அருள்வாக்குபடி மண்டபத்தை தோண்டியபோது முருகரின் கற்சிலை கிடைத்தது: திருத்தணி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Muruga ,Samiyadia ,Bustle ,Tiruthani ,Natham ,Agur panchayat ,Samiadia ,
× RELATED வல்லமை தருவான் வடபழனி முருகன்