×

புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டியின் மகன் பிரசாரத்தை துவங்கினார்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதியில் தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டவுடன் அவரது மகன் சாண்டி உம்மனை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே இவர் பிரச்சாரத்தை தொடங்கினார். கேரளாவில் 2 முறை முதல்வராகவும், பலமுறை அமைச்சராகவும் இருந்த உம்மன் சாண்டி, கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 53 வருடங்கள் எம்எல்ஏவாக இருந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உம்மன் சாண்டி காலமானார். அவரது மறைவால் புதுப்பள்ளி தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் உம்மன் சாண்டியின் குடும்பத்தில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. குறிப்பாக உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனுக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று தொடக்கத்திலிருந்தே கூறப்பட்டது.

இந்நிலையில் புதுப்பள்ளி உள்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு செப்டம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே சாண்டி உம்மன் புதுப்பள்ளி தொகுதியில் நேற்று இரவே தனது பிரசாரத்தை தொடங்கினார். இந்த தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி மற்றும் பாஜ கூட்டணி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்த கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்தலிலும் புதுப்பள்ளி தொகுதியில் மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் உம்மன் சாண்டி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி கூட்டணி வேட்பாளரான ஜெய்க் சி.தாமசை 9044 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அந்த தேர்தலில் உம்மன் சாண்டிக்கு 63,372 வாக்குகளும், ஜெய்க் சி. தாமசுக்கு 54,328 வாக்குகளும், பாஜ சார்பில் போட்டியிட்ட ஹரிக்கு 11,694 வாக்குகளும் கிடைத்தன.

The post புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டியின் மகன் பிரசாரத்தை துவங்கினார் appeared first on Dinakaran.

Tags : Ooman Sandy ,Pudupalli ,Thiruvananthapuram ,Kerala ,Chief Minister ,Ooman Sandhi ,Ooman Sandi ,Pudupally ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!