×

3 மாதங்கள் கடந்த பிறகும் மணிப்பூரில் படுகொலைகளை தடுக்க பிரதமர் மோடி தவறிவிட்டார்: மக்களவையில் கனிமொழி எம்.பி. விளாசல்..!!

டெல்லி: 3 மாதங்கள் கடந்த பிறகும் மணிப்பூரில் படுகொலைகளை தடுக்க பிரதமர் மோடி தவறிவிட்டார் என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து மக்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசினார்.

மணிப்பூர் விவகாரம்: கனிமொழி எம்.பி. பேச்சு

மணிப்பூர் விவகாரம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மணிப்பூர் வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் படுகொலைகளை தடுக்க மோடி தவறிவிட்டார்:

மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசு மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது. 3 மாதங்கள் கடந்த பிறகும் மணிப்பூரில் படுகொலைகளை தடுக்க பிரதமர் மோடி தவறிவிட்டார். மணிப்பூர் கலவரத்தை தடுக்க அம்மாநில முதலமைச்சர் தவறிவிட்டார். மணிப்பூர் மகளிர் ஆணையமும் தேசிய மகளிர் ஆணையமும் வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே உள்ளது. மணிப்பூரில் படுகொலைகளை தடுத்து நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை என கனிமொழி எம்.பி. குற்றசாட்டினார்.

மணிப்பூர் மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை:

மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறையினர் எந்த உதவியும் செய்யவில்லை. மணிப்பூரில் நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் அவலநிலையில் வசிக்கின்றனர். முகாம்களில் தங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பசி மற்றும் அச்சத்தின் காரணமாக அழுது கொண்டிருக்கின்றனர். உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மணிப்பூரில் மக்கள் தவித்தனர். முதலமைச்சரோ, பிரதமரோ ஏன் எங்களை காண வரவில்லை என மணிப்பூரில் முகாமில் இருந்த சிறுமி கேட்டாள். எல்லாவற்றையும் இழந்த மக்களை அணுக கூட நீங்கள் நினைக்கவில்லை என்று கனிமொழி எம்.பி. குறிப்பிட்டார்.

மணிப்பூர் விவகாரம் – பாஜக விளக்கம் அளிக்காதது ஏன்?:

மணிப்பூர் மக்களின் கண்களில் நாங்கள் துயரத்தை மட்டுமே கண்டோம். மணிப்பூர் விவகாரத்தில் பாஜக விளக்கம் அளிக்காமல் இருப்பது ஏன்? என மக்களவையில் எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பினார். மணிப்பூர் மக்களை பிரதமர் நேரில் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம். மணிப்பூர் மக்களை மத்திய, மாநில அரசுகள் சந்தித்து நீதி வழங்கப்படும் என்ற உறுதியை அளிக்க வேண்டும். அரசு மக்களுடன் துணை நிற்கிறதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என கனிமொழி தெரிவித்தார்.

காவல்துறையினர் அதிகமாக இருந்தும் மணிப்பூரில் வன்முறையை தடுக்கவில்லை:

காவல்துறையினர் அதிகமாக இருந்தும் மணிப்பூரில் வன்முறையை தடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ‘டபுள் இன்ஜின்’ அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்? என்றும் கனிமொழி வினவினார்.

தமிழ்நாட்டின் வரலாறு பற்றி மோடிக்கு தெரியுமா?

தமிழ்நாட்டின் வரலாறு பற்றி பிரதமர் மோடிக்கு தெரியுமா? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்தீர்கள்; சாதாரண மக்களை கைவிட்டபோது பாண்டியனின் செங்கோல் எரிந்தது என்று கனிமொழி பேசினார்.

இந்தி திணிப்பை கைவிட்டு சிலப்பதிகாரம் படியுங்கள்:

எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள்; அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஒடிசா ரயில் விபத்தில் இறந்த சிலரது சடலங்கள் இன்னும் உரிமை கோரப்படாமல் உள்ளன என கனிமொழி தெரிவித்தார்.

ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை:

ரயில்வே துறையில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் ஏராளமானோர் வேலையில்லாமல் உள்ள நிலையில் ஒன்றிய அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமே இல்லை என்றார்.

பாஜக அரசுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி:

25,593 எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்கள் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இதுதான் நீங்கள் பெருமையுடன் சொல்லும் இந்தியாவா? என்று பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பிய கனிமொழி எம்.பி., மாற்றுத்திறனாளிகளுக்காக பாஜக அரசு வழங்கும் உதவித் தொகை ரூ.300-க்கு ஒரு கிலோ தக்காளிதான் கிடைக்கும் என்று கூறினார்.

பாஜகவுக்கு இந்தியா விரைவில் பாடம் கற்பிக்கும்:

இந்தியா உங்களுக்கு மிக விரைவில் பாடத்தை கற்றுக்கொடுக்கும் என்று மக்களவையில் கனிமொழி எம்.பி. ஆவேசமாக பேசினார்.

The post 3 மாதங்கள் கடந்த பிறகும் மணிப்பூரில் படுகொலைகளை தடுக்க பிரதமர் மோடி தவறிவிட்டார்: மக்களவையில் கனிமொழி எம்.பி. விளாசல்..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Manipur ,Kanilangeli ,GP Vlasal ,Delhi ,Kanilinguli ,GP ,Dinakaran ,
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...