×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ பாடல்கள் ஆல்பம் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் பாடல்கள் ஆல்பம் நேற்று மாலை வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தை சன் டிவி நெட்வொர்க்  தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா  இயக்க, வெற்றி ஒளிப்பதிவு  செய்கிறார். டி.இமான் இசை அமைக்க, ரூபன் எடிட்டிங் செய்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா,  குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய படங்களுக்குப் பிறகு சன்  பிக்சர்ஸ், ரஜினிகாந்த் இணைந்துள்ள 3வது படம் ‘அண்ணாத்த’. ஏற்கனவே ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய படங்களின்  மாபெரும் வெற்றியால் ‘அண்ணாத்த’ படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும்  ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் தீபாவளி  பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4ம் தேதி அன்று தியேட்டர்களில்  வெளியாகிறது. இப்படத்துக்காக இமான் இசையில் விவேகா எழுதிய ‘அண்ணாத்த… அண்ணாத்த…  வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு’ என்ற பாடல் கடந்த அக்டோபர் 4ம் தேதி மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ‘அண்ணாத்த’ படத்தின் 2வது பாடல் கடந்த அக்டோபர் 9ம் தேதி மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இமான் இசையில் யுகபாரதி எழுதிய ‘சாரல் காற்றே’ என்ற பாடலை சித்ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருந்தனர். இதில் ரஜினிகாந்த், நயன்தாரா தோன்றி ஆடிப்பாடிய காட்சிகள் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மனதைக் கொள்ளைகொள்ளும் மெலடி பாடலாக இது உருவாகியுள்ளது. இப்படத்தின் 3வது பாடல் கடந்த அக்டோபர் 18ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. இமான் இசையில் மணி அமுதவன் எழுதிய இப்பாடலை அஸிஸ் நகாஷ், ஆண்டனிதாசன், வந்தனா சீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர். ‘மருதாணி செவப்பு… செவப்பு. மகராணி சிரிப்பு… சிரிப்பு’ என்ற இப்பாடல் ரசிகர்களைக் கவரும் துள்ளலான பாடலாக அமைந்துள்ளது. இதில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர். இந்நிலையில், ‘அண்ணாத்த’ படத்தின் 4வது பாடல் கடந்த 24ம் தேதி மாலை 6 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இமான் இசையில் அருண் பாரதி எழுதிய ‘வா சாமி’ என்ற பாடலை முகேஷ் முஹம்மது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் இணைந்து பாடியுள்ளனர். இதில் ரஜினிகாந்த் ஆக்ரோஷமான தோற்றங்களில் அட்டகாசமாக நடித்துள்ளார்.  ‘அண்ணாத்த’ படத்தின் முதல் 3 பாடல்களைப் போலவே 4வது பாடலும் யூடியூப்பில் வைரலானது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் 5வது மற்றும் 6வது பாடலுடன் மொத்த இசை ஆல்பமும் நேற்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இமான் இசையில் தாமரை எழுதிய என்னுயிரே என்ற பாடல் உருக்கமான மெலடி பாடலாக இடம்பெற்றுள்ளது. அறிவு எழுதிய ஏ ஃபார் அண்ணாத்த என்ற ராப் பாடலும் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய 2 பாடல்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முழு பாடல்கள் நிறைந்த ஆல்பமும் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மொத்தம் 6 பாடல்களுடன் அண்ணாத்த இசை ஆல்பத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த இசை ஆல்பம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது….

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ பாடல்கள் ஆல்பம் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Sun Pictures' ,Rajinikanth ,CHENNAI ,Sun Pictures ,Sun Pictures… ,Dinakaran ,
× RELATED பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...