![]()
*மன்ற கூட்டத்தில் தகவல்
திருமலை : திருப்பதி மாநகராட்சியில் பொதுமக்களின் சேவைக்காக ₹2.14 கோடி மதிப்பில் டபுள் டெக்கர் பஸ் வாங்குவது என மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பதி மாநகராட்சி மன்ற கூட்டம் எஸ்.வி. பல்கலைக்கழக செனட் ஹாலில் மேயர் சிரிஷா தலைமையில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ பூமனா கருணாகர ரெட்டி கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் கமிஷனர் ஹரிதா மன்ற தீர்மானங்களை கொண்டு வந்தார். பின்னர் நிலைக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பாபு, நரசிம்மாச்சாரி, கணேஷ், உமா, கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் விவாதித்து ஒருமனதாக அனைத்து தீர்மானத்திற்கும் ஒப்புதல் அளித்தனர்.
முன்னதாக, சிறப்பு அழைப்பாளர் எம்எல்ஏ பூமனா கருணாகர ரெட்டி மாமன்ற கூட்டத்தில் பேசுகையில், திருப்பதி மாநகரில் பல புதிய சாலைகள் கொண்டு வந்ததால் திருப்பதி மாநகராட்சி வளர்ச்சி பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. மாநகராட்சி சாலைகள் அமைப்பது ஒருபக்கம் என்றால், அந்த சாலைகளுக்கு ஏழுமலையான் சேவையில் இருந்த பெருமக்களின் பெயர்களை சூட்டுவது பாராட்டுக்குரியது. திருப்பதி மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.
தொடர்ந்து, துணை மேயர் பூமனா அபினய் ரெட்டி பேசியதாவது:திருப்பதியின் வளர்ச்சிக்காக அடுத்த தலைமுறையை பற்றி யோசித்து பணிகள் செய்து வருகிறோம். மாநகரின் வளர்ச்சிக்கு தனது பேரவை உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள மாஸ்டர் பிளான் சாலைகளால் பல நன்மைகள் கிடைக்க உள்ளது. மாநகர மேம்பாட்டிற்காக மேலும் மாஸ்டர் பிளான் சாலைகள் கொண்டு வரப்படும்.
எஸ்.வி.பல்கலைக்கழகத்தின் வழியாக 3 சாலைகள் கொண்டுவர திட்டமிட்டிருந்தோம். ஆனால், நடுவில் உள்ள சாலை பல ஆட்சேபனைகளை சந்திக்க நேரிடும். சிலர் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் கவுன்சிலில் விவாதித்து, அந்த சாலையை கொண்டுவரும் முடிவை நிறுத்தி வைக்கிறோம். பல்கலையின் என்.சி.சி. நகர் வழியாக உயிரியல் பூங்காவை இணைக்கும் வகையில் ஒரு சாலையும், உயிரியல் பூங்காவை இணைக்கும் வகையில் எஸ்.வி. கலை கல்லூரியை ஒட்டி மற்றொரு சாலையும் அமைக்க கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. திருப்பதியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் எம்எல்ஏ பூமனா கருணாகர ரெட்டியின் வழியில் சென்று வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, மேயர் சிரிஷா பேசியதாவது:திருப்பதி நகர மக்களுக்கு தேவையான பணிகள் குறித்து கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், திருப்பதி நல்ல தண்ணீர் குளத்தை மேம்படுத்த தேவஸ்தானம் ₹75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் பராமரிப்பு பணிக்காக தேவஸ்தானத்தின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. ₹3.85 கோடியில் புதிய கரகம்பாடி ரோட்டில் இருந்து திம்மிநாயுடு பாலம் வரை, இதேபோல் திம்மிநாயுடு பாலம் ரோட்டில் இருந்து பிருந்தாவனம் அடுக்குமாடி குடியிருப்பு வரை சாலை அமைக்கப்பட உள்ளது.
புதிய கெஸ்ட் லைன் சாலையில் இருந்து மங்களம் கோயில் வரை சாலை அமைக்க டிவைடர் மற்றும் சென்ட்ரல் லைட்டிங் ₹1.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீனிவாசம் பின்புறம் 40 அடி சாலை அமைக்கவும் மின்விளக்கு அமைக்கவும் ₹1.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.19வது வார்டில் வடிகால் மற்றும் சாலைகள் அமைக்க ₹1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ. அருகில் உள்ள ஷாதி மஹால் மேம்பாட்டுக்கு ₹80 லட்சம், 20வது வார்டில் சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிய சாலைகள் அமைக்க ₹1.96 கோடி, 22வது வார்டில் சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக ₹1.30 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஸ்ரீதேவி வளாகத்தின் பின்புறம் உள்ள சாலையை அகலப்படுத்த ₹1.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பவானி நகர் அடுத்த தேவஸ்தான நிர்வாக அலுவலகம் ஒட்டிய சாலை அகலப்படுத்த ₹1.97 கோடி, பொதுமக்கள் சேவைக்காக டபுள் டெக்கர் பஸ் வாங்க ₹2.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 21வது வார்டில் சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிய சாலைகள் அமைக்க ₹1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் ஒவ்வொரு கோட்டத்திலும் உள்ள அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர், திருப்பதி எம்எல்ஏ பூமனா கருணாகர ரெட்டிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவராக மீண்டும் வாய்ப்பு அளித்ததற்காக முதல்வர் ஜெகன்மோகனுக்கு நன்றி தெரிவித்து மேயர், கமிஷனர் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post திருப்பதி மாநகராட்சியில் பொதுமக்கள் சேவைக்காக ₹2.14 கோடியில் டபுள் டெக்கர் பஸ் appeared first on Dinakaran.
