×

திருப்பதி மாவட்டத்தில் திருட்டுபோன ₹81 லட்சம் மதிப்புள்ள 450 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்

*உரியவர்களிடம் கூடுதல் எஸ்பி ஒப்படைத்தார்

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுபோன ₹81 லட்சம் மதிப்புள்ள 450 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். அந்த செல்போன்களை உரியவர்களிடம் கூடுதல் எஸ்பி நேற்று ஒப்படைத்தார்.திருப்பதி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுபோன 450 செல்போன்களை மீட்ட போலீசார் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. இதில் கூடுதல் எஸ்பி வெங்கட் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:

மாநில டிஜிபி ராஜேந்திரநாத் உத்தரவின்பேரில், திருப்பதி எஸ்பி பரமேஸ்வர் மேற்பார்வையில், திருப்பதி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரா சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து திருட்டு போன மற்றும் தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதற்காக மாவட்ட காவல்துறை சார்பில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மொபைல் ஹன்ட் (வாட்ஸ்அப் 9490617873) விண்ணப்ப சேவைகள் மூலம் பெறப்பட்ட புகார்களின்படி, செல்போன்களை மீட்கும் பணி நடந்தது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் 5 தவணைகளாக ₹2,12,40,000 மதிப்புள்ள 1,180 செல்போன்கள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, 6வது தவணையாக கடந்த ஒரு மாதத்தில் ₹81,00,000 மதிப்புள்ள 450 செல்போன்கள் மீட்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. திருப்பதி சைபர் கிரைம் போலீசார் இதுவரை 6 தவணைகளில் ₹2,93,40,000 மதிப்புள்ள மொத்தம் 1,630 செல்போன்களை மீட்டுள்ளனர். திருப்பதி நகரம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரமாக விளங்கி வருகிறது. தொலைதூர இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இதனால் பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருட்டு நடக்கிறது.

எனவே, செல்போன்கள் தொலைந்து போனவர்கள் காவல் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுப்பதில் சிரமம் இருப்பதால் திருப்பதி மாவட்ட காவல்துறை சார்பில் `மொபைல் அண்ட் வெப்-லிங்க்’ என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைந்த செல்போன் குறித்த தகவல்களை இந்த இணைய இணைப்பில் கொடுத்தால் அந்தந்த செல்போன்களை மீட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைப்பார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

The post திருப்பதி மாவட்டத்தில் திருட்டுபோன ₹81 லட்சம் மதிப்புள்ள 450 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Tirupati district ,Tirupati ,Dinakaran ,
× RELATED திருப்பதி மாவட்டத்தில் நடைபெற உள்ள...