×

பாடாலூர் அருகே மழை வேண்டி செங்கமலையார் கோயிலில் கிடாவெட்டி வழிபாடு

 

பாடாலூர், ஆக.9: பாடாலூர் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் மழை வேண்டி செங்கமலையார் கோயிலில் கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற நூதன வழிபாடு நடைபெற்றது. இந்த நூதன விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே நாட்டார்மங்கலத்தில் அருள்பாலித்துவரும் செங்கமலையார் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்று, மழை பொழிய வேண்டி கிடாவெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டு நாட்டார்மங்கலம் அருகே வடக்கிமலை அடிவாரத்தில் உள்ள செங்கமலையார் சுவாமிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
இதில் பங்கேற்ற ஆண்கள் அனைவருக்கும் கிடா விருந்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஈச்சங்காடு, நாட்டார்மங்கலம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். செங்கமலையார் சுவாமிக்கு ஆண்கள் மட்டுமே நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மழை வேண்டி வழிபாடு நடத்தி வந்தது அருகில் உள்ள கிராமங்களில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாடாலூர் அருகே மழை வேண்டி செங்கமலையார் கோயிலில் கிடாவெட்டி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Kidavetti ,Chengamalayar temple ,Padalur ,Kitavetti ,Sengamalaiyar Temple ,Natarmangalam ,
× RELATED பாடாலூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து செவிலியர் பலி