×

தமிழக கிராம பகுதிகளில் அதிகரித்து வரும் பாம்பு கடி: 2022ம் ஆண்டு 406 பேர் உயிரிழப்பு; கோவையில் மட்டும் 63 பேர் பலி; உயிரிழப்பை குறைக்க அரசு நடவடிக்கை

* சிறப்பு செய்தி
இந்தியாவிலேயே பாம்பு கடியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம். உலக சுகாதார கணக்கீட்டின்படி, உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 54 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு 1,38,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50,000 பேர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தரும் விஷயம் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்திய ஒன்றியத்தில் 250 மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளன. அதில், 60 வகை பாம்பு மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. குறிப்பாக தமிழகத்தில் கட்டுவிரியன், கண்ணாடி விரியன், நல்ல பாம்பு மற்றும் சுருட்டை விரியன் ஆகிய 4 வகை பாம்புகளின் விஷம் மட்டுமே மனிதர்களை உடனடியாக கொல்லக்கூடிய தன்மை கொண்டவை. மீதம் உள்ள வெள்ளிக்கோல் விரியன், பச்சை பாம்பு, மண்ணுளி பாம்பு, பவளப்பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான் குட்டி, பசும் சாம்பல் நிற தண்ணீர் பாம்பு உள்ளிட்டவை விஷத்தன்மை இல்லாதவை.

தேசிய சுகாதார நிறுவன கணக்கெடுப்பின்படி, 2020ம் ஆண்டில் இந்தியாவில் மேற்குவங்க மாநிலத்தில் தான் பாம்புகள் கடித்து அதிகம் பேர் இறந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்த மாநிலமாக தமிழகம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒடிசா 3வது இடத்திலும், உத்தரபிரதேசம் 4வது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 1,284 பேர் பாம்பு கடியால் உயிரிழந்து உள்ளனர். கடந்தாண்டு மட்டும் 406 பேர் இறந்து உள்ளனர். கோயம்புத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3 வகை பாம்பால் மட்டுமே தமிழக கிராமங்களில் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது என்று பாம்பு மீட்பாளர் சஞ்சய் கூறுகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: நான் 20 வருடங்களாக பாம்பு மீட்பாளராக உள்ளேன். மக்களிடையே பாம்பு கடி அதிகமாவதற்கு முக்கிய காரணம் குப்பைதான். பாம்பின் முக்கிய உணவு எலி. வீட்டை சுற்றி குப்பை அதிகமாக இருந்தால் அங்கு எலி நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால் பாம்பு வீட்டை சுற்றி வர தொடங்கும். இது மக்களுக்கு ஆபத்தாக முடிகிறது. இரவு நேரங்களில் மட்டுமே அதிகமாக பாம்புகள் உணவை தேடி செல்லும். அப்போது வேலை முடிந்து செல்லும் மக்கள் இரவில் பாம்பு இருப்பது தெரியாமல் அதை மிதித்து விடுகின்றனர்.

அப்போது பாம்பு தன் தற்காப்புக்காக மனிதனை கடித்துவிடுகிறது. கிராமத்தில் தான் பாம்பு கடி அதிகமாக பதிவாகிறது. குறிப்பாக, கட்டுவிரியன், நாக பாம்பு மற்றும் சுருட்டை விரியன் ஆகிய மூன்று வகை பாம்புகளால் மட்டுமே அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பாம்பு கடி உயிரிழப்பை தடுப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விஷ எதிர்ப்பு மருந்து உள்ளது.

இதுதொடர்பாக சுகாதார துறை உயர் அதிகாரி கூறியதாவது: பாம்பு கடி உயிரிழப்பை தடுப்பதற்காக 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விஷ எதிர்ப்பு மருந்து இருப்பதை டிடிம்ஸ் போர்டல் மூலம் கண்காணித்து வருகிறோம். அதுமட்டுமின்றி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விஷ எதிர்ப்பு மருந்து எவ்வாறு, எந்த அளவில் செலுத்த வேண்டும், முதலுதவி எப்படி செய்யவேண்டும் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பதாகைகள், போஸ்டர்கள் (ஐஇசி ஆக்டிவிட்டி) மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை முதலிடம்
மாவட்டங்கள் உயிரிழந்தவர்கள்
கோவை 63
சேலம் 55
மதுரை 46
தஞ்சாவூர் 22
விழுப்புரம் 20

பாம்பு கடி உயிரிழப்பு
ஆண்டு கடிபட்டோர் உயிரிழந்தவர்கள்
2019 24,573 297
2020 20,399 252
2021 26,287 329
2022 27,868 406

* பாம்பு கடித்தவுடன்…
செய்ய வேண்டியவை
* பாம்பு கடித்த நபரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
* மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவரை இடது பக்கமாக ரெக்கவரி பொசிஷனில் படுக்க வைக்க வேண்டும்.
* பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.
* கடிபட்டவரை சுற்றி நிற்காமல் காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.

செய்ய கூடாதவை
* பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்கமாக கட்ட கூடாது. அப்படி இறுக்கமாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும்.
* பாரம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத அல்லது ஆபத்தை விளைவிக்கக் கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூடாது.
* ஐஸ் பேக்குகள் அல்லது குளிர்ந்த பொருட்களை காயத்தின் மேல் வைக்க கூடாது.

The post தமிழக கிராம பகுதிகளில் அதிகரித்து வரும் பாம்பு கடி: 2022ம் ஆண்டு 406 பேர் உயிரிழப்பு; கோவையில் மட்டும் 63 பேர் பலி; உயிரிழப்பை குறைக்க அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tema ,India ,World Health Calculation ,Temple ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...