×

மாநிலங்களவையில் டெல்லி சேவைகள் மசோதா நிறைவேறிய நாள் மக்களாட்சியின் கறுப்பு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நாள் மக்களாட்சியின் கறுப்பு நாள் என்றும், எடப்பாடி பழனிசாமி பாஜவின் கொத்தடிமையாக ஊர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போல தரம் குறைக்கும் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள். எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது. 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்.

மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல், டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பாஜவின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தை குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. நான் யாருக்கும் அடிமையில்லை என்றபடியே, பாஜவின் பாதம் தாங்கி, கொத்தடிமையாக தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

The post மாநிலங்களவையில் டெல்லி சேவைகள் மசோதா நிறைவேறிய நாள் மக்களாட்சியின் கறுப்பு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Delhi Services Bill ,Rajya Sabha ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Edappadi Palaniswami ,BJP ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...