×

விருதுநகரில் சிப்காட் மூலம் 1,052 ஏக்கரில் ரூ.2 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் ‘மெகா’ ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்: 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

* சிறப்பு செய்தி
விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் மூலம் 1,052 ஏக்கரில் ரூ.2 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் ‘மெகா’ ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தியா முழுவதும் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் நிலத்தில் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜவுளி பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் 22ல் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகம், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கையழுத்திடப்பட்டன. காணொளி காட்சி மூலம் பூஜையும் போடப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசின் சிப்காட் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில், 1,052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் ரூ.2 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்துகிறது. இதில் 51 சதவீதம் ஒன்றிய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இ.குமாரலிங்கபுரத்தை மையமாக கொண்டு அருகில் உள்ள அச்சம்பட்டி, கோவில்புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த ஜவுளி பூங்கா அமைகிறது. இதன்மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். அதிவீன உட்கட்டமைப்பு, சிறப்பு உற்பத்தி பகுதிகள், சமூக உட்கட்டமைப்பு, உற்பத்தியை உடன் தொடங்க சிறப்பு வசதிகள், வணிகப்பகுதி, பொது அடிப்படை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

ஒரு துணியின் உருவாக்க தேவையான அனைத்து வசதிகளுடன் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்கள் பூங்காவில் இடம்பெற உள்ளன. இங்கு ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செய்யப்படும். ஒரு ஏக்கரில் சிப்காட் அலுவலகம் அமைய உள்ளது. நான்கு வழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் ரோடு 30 மீட்டருக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் அகலப்படுத்தப்பட உள்ளது. 1.8 கி.மீ. வரை விரிவாக்கம் செய்யப்படும். மண் பரிசோதனை முடிந்த விட்ட நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளன. பல கட்டங்களாக பணிகள் நடக்க உள்ளன. ரூ.36 கோடிக்கு குடிநீர் பிளான்ட் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட உள்ளது.

இந்த ஜவுளி பூங்கா முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வந்தவுடன் குமாரலிங்கபுரம், கோவில்புலிக்குத்தி கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளிகளை தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட உள்ளன. பல கட்டங்களாக வளர்ச்சி பணிகள் செய்யப்பட உள்ளன. முதல் கட்டத்தில் அமைய உள்ள ஆலைகள் மூலம் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். அடுத்தடுத்த கட்டங்களில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வரை உருவாகும். இது விருதுநகர் மாவட்ட மத்திய பகுதி மக்களுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம் ஆகும். ஜவுளி பூங்காவிற்கான மாஸ்டர் பிளானை ஸ்கூல் நெட் நிறுவனம் செய்து வருகிறது. ஜவுளி தொழில்கள் அனைத்திற்கும் இடமளிக்கும் வகையில் அலகு வாரியாக கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

குறிப்பாக சாய கழிவுகளை சுத்திகரிக்க சி.யு.டி., சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. விரைவில் நில விலை உறுதி ஆகி அறிவிக்கப்படும். திட்ட அலுவலகம் ஒரு ஏக்கரில் குமாரலிங்கபுரத்தில் அமைய உள்ளது. மண் பரிசோதனை முடிந்து விரைவில் பணிகள் துவங்கும். 160 முதல் 180 டெக்ஸ்டைல், அப்பேரல் அலகுகள் ஜவுளி பூங்கா மூலம் இடம்பெற உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளி பூங்காவாக இது இருக்கும். ஒவ்வொரு கட்டமாக இதன் வளர்ச்சி இருக்கும். தற்போது 11 ஜவுளி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன. உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எம்.இ., பி.எஸ்.சி. படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகளவில் கிடைக்கும் என்றார்.

The post விருதுநகரில் சிப்காட் மூலம் 1,052 ஏக்கரில் ரூ.2 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் ‘மெகா’ ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்: 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chipcot ,Virudhunagar ,News ,Tamil ,Nadu ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை...