×

உணவுக்குழாய் கிழிசலால் ஆபத்தான நிலையில் இருந்த முதியவரை ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான ஆபரேஷன் மூலம் காப்பாற்றினர்: இயல்புநிலைக்கு திரும்பிய நோயாளி

சென்னை: உணவுக்குழாய் கிழிசலினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முதியவரியின் உயிரை காப்பாற்றி ரேலா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் ராஜகோபாலன் (75). இவர், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தினமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதோடு இதய துடிப்பு மற்றும் சுவாசத்தில் பெரியளவு வித்தியாசம் ஏற்பட்டது. இதனால், ரத்த அழுத்தம் குறைவு மற்றும் மார்புக்கு கீழே வலியும் ஏற்பட்டுள்ளது.

இதனால் ராஜகோபாலன், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவமனையின் முதுநிலை சிறப்பு நிபுணர் ஜிம்மி பிரபாகரன் தலைமையிலான மருத்துவர்கள் பரிசோதனையில், அவருக்கு போர்ஹேவ் சிண்ட்ரோம் என்ற மிக அரிதான பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மூலம், முதியவரின் உணவு குழாயின் கீழ்ப்புற முனையில் ஒரு பெரிய கிழிசல் கண்டறியப்பட்டது.

அதுவே மார்புக்குழியின் அக உறையில் திரவத்தேக்கமும் மற்றும் உயிருக்கு ஆபத்தான பிற சிக்கல்கள் ஏற்பட்டதற்கு காரணம் எனவும் தெரியவந்தது. எனவே, டாக்டர் பெருங்கோ தலைமையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு மார்பறை திறப்பு சிகிச்சையை நான்கு மணி நேரம் செய்து உணவுக்குழாய் கிழிசலை சரி செய்தனர். எனினும், வாய் வழியாக எந்த உணவையும் உட்கொள்வது சாத்தியமற்றது என்பதால், ஒரு இரைப்பை குழாய் வழியாக 6 மாதங்கள் வரை அவருக்கு உணவளிக்கப்பட்டது. பின்னர், மறுநாளப்பிணைப்பு என அழைக்கப்படும் மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து டாக்டர் ஜிம்மி பிரபாகரன் கூறியதாவது: திரும்பத் திரும்ப அல்லது கடும் அழுத்தத்தோடு வாந்தி எடுக்கும்போது உணவுக்குழாய் மீது அளவுக்கு அதிக அழுத்தம் ஏற்படுவதனால், உணவுக்குழாயின் சுவர் கிழியக்கூடும். இதனால் உணவுத்துகள்கள், பாக்டீரியா மற்றும் செரிமானத்திற்கான அமிலங்கள் போன்றவை மார்பு அல்லது வயிற்றுக்குள் கசியத்தொடங்கி, கடுமையான தொற்றை விளைவிக்கும். உணவுக் குழாய்க்குள் பயணிக்க வேண்டிய இப்பொருட்கள் உடலின் எஞ்சிய பகுதிகளுக்கு செல்லுமானால் நச்சு பரவி அதன் காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்தும். போர்ஹேவ் சிண்ட்ரோம் அரிதான ஒரு பாதிப்பு. மருத்துவ உலகில் இந்த பிரச்னை எதிர்கொள்ளப்படுவது மிக அரிதானது.

இத்தகைய பாதிப்பிற்கு உடனடி மருத்துவ சிகிச்சை வழங்குவது மிக முக்கியமானது. உணவுக்குழாய் கிழிசலினால் பாதிக்கப்பட்டதிலிருந்து 24 மணி நேரங்களுக்குள் சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான விகிதம் 75 சதவீதமாக இருக்கும். போர்ஹேவ் சிண்ட்ரோம் என்பது சவாலான, அதிக சிக்கலான மருத்துவ பாதிப்பு நிலையாகவே இன்றளவும் இருக்கிறது. ராஜகோபாலனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் நாங்கள் பெற்றிருக்கும் வெற்றி, உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் நாங்கள் கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post உணவுக்குழாய் கிழிசலால் ஆபத்தான நிலையில் இருந்த முதியவரை ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான ஆபரேஷன் மூலம் காப்பாற்றினர்: இயல்புநிலைக்கு திரும்பிய நோயாளி appeared first on Dinakaran.

Tags : Rela Hospital ,CHENNAI ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்