×

கிறிஸ்துவின் எண்ண ஓட்டத்துடன் அருட்பணியாற்றுதல்

கிறிஸ்துவம் காட்டும் பாதை

(மத்தேயு 28: 16-20)

கடவுளாகிய தந்தையும் இயேசு கிறிஸ்துவும் கிறிஸ்துவின் எண்ணம் என்பதற்கான வேர் எங்குள்ளது என்பதே நம் முதல் தேடலாக இருத்தல் வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, கடவுளின் மைந்தராகவும் மேசியாவாகவும் இவ்வுலகில் வாழ்ந்தார். (யோவான் 20:31; மாற்கு 8:29) கடவுளுக்கும் இயேசுவுக்கும் இருந்த உறவு பிரிக்க முடியாதது மட்டுமல்ல, தம்மைத் தந்தையாகிய கடவுளே உள்ளிருந்து இயக்குவதாகவும் இயேசு நம்பினார். (யோவான் 14:10). இயேசு, தாம் தந்தையிடமிருந்து கேட்டவற்றையும், தந்தையிடம் கண்டதையுமே அன்று மக்களிடையே பேசினார். (யோவான் 8:26,38). அதுமட்டுமல்ல, தந்தையின் வார்த்தையைக் கடைப்பிடிக்கிறவராகவும் இருந்தார். (யோவான் 8:55).

மேலும், ‘‘என்னை அனுப்பினவரின் திருவுள்ளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதும்தான் என் உணவு” (யோவான் 4:34) எனவும் கூறினார். எனவே இயேசு கிறிஸ்துவின் எண்ணங்கள் அவரது தந்தையாகிய கடவுளிடம் வேர் கொண்டு வெளிப்பட்டவை என்பது நமக்குத் தெளிவாகிறது. இயேசு கிறிஸ்து செய்தது என்ன?

இயேசு கிறிஸ்து தமது திருப்பணியைத் தொடங்கும் போது, தம்மைத் தந்தையாகிய கடவுள் எதற்காக அருட்பொழிவு செய்துள்ளார் என அறிக்கையிட்டார். (இதை நாசரேத்தூர் அறிக்கை / Nazareth Manifesto என்பர்). “ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர், என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலைசெய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” (லூக்கா 4:18-19) என்றார். இதை இயேசு நிறைவேற்றினாரா? ஆம்! இயேசு கிறிஸ்து தமது பணியில் இதை நிறைவேற்றினார் என்பது உண்மை.

இதை உறுதிசெய்யும் வகையில், திருமுழுக்கு யோவான் தமது சீடர்களை இயேசுவிடம் அனுப்பி, வருகிறவர் நீர் தானா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்று விசாரித்தபோது, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காதுகேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.’’ (மத்தேயு 11:4-5) என்று பதிலுரைத்தார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்தது கடவுள் அரசின் தொடக்கமும் அதன் விரிவாக்கமும் ஆகும். அவரது ஒரே எண்ணம் அவரது ஒரே இலக்கு கடவுளின் ஆளுகை பூமியில் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்பதாகும். இதில் ஏழைகளுக்கு நற்செய்தி என்பது ஏழ்மைக்கான காரணிகளை நீக்குவது ஆகும். ஏழைகளின் வாழ்வில் ஏழ்மை பலவந்தமாகத் தடுத்துவந்தவை அனைத்தும் ஏழைகளுக்குக் கிடைக்கச் செய்வது ஆகும். (எ.கா. உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் மற்றும் அதிகாரத்தில் பங்கேற்பு). இது ஒரு அரசியல் நடவடிக்கை ஆகும். இது ஏழைகள் ஒருங்கிணைவதால் மட்டுமே சாத்தியம். இதுதான் இறையரசுப் பணி.

அதிகாரமளிக்கும் உயிர்தெழுந்த ஆண்டவர். உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தாம் பணிசெய்த அதே கலிலேயாவில் (ஏழைகள், பாமரர் மிகுந்த பகுதி) சீடர்களைச் சந்தித்து அவர்களின் அவநம்பிக்கை மற்றும் அச்சத்தை அகற்றி நம்பிக்கையையும், துணிவையும் அளித்து, தாம் தொடங்கிவைத்த இறையரசுப் பணியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கின்றார். இறையரசு என்பது, திடீரென வானத்திலிருந்து இறங்கி வருவதன்று. அல்லது தனி ஒருவரால் ஏற்படுத்தக்கூடியதுமல்ல.

மாறாக அது கடவுளையும் இயேசு கிறிஸ்துவையும் நம்பும் மக்கள் இயக்கம் உருவாக்கும் ஒரு மாற்றுப் பண்பாடு, மாற்றுத் தகவுகள் கொண்ட வாழ்க்கைமுறை. மேலும், அது ‘‘ஒருவர் மற்றவரிடம் அன்புகூறவேண்டும்’’ (யோவான் 15:17) என்ற இயேசுவின் கட்டளையை அடிப்படையாகக் கொண்டது.

எனவேதான், உயிர்த்தெழுந்த ஆண்டவர் தமது சீடர்களை சந்தித்து மக்களினத்தவரை தமது சீடராக்கவும், அவர்களுக்குத் திருமுழுக்கு அளித்து இறையரசின் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்ததவும், அவர் கட்டளையிட்டவைகளைக் கற்பிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். (மத்தேயு 28:16-20) இன்றைய கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் எண்ணங்களை சரியாகப் புரிந்து கொண்டு, அவரது அருட்பணியில் ஈடுபடவேண்டும். கடவுளின் ஆளுகையே இயேசு கிறிஸ்துவின் எண்ணம்; அன்பே இறை ஆளுகையின் அடிப்படைக்கொள்கை; ஆமென்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post கிறிஸ்துவின் எண்ண ஓட்டத்துடன் அருட்பணியாற்றுதல் appeared first on Dinakaran.

Tags : Christ ,Christianity ,God ,Jesus Christ ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…