புவனகிரி, ஆக. 7: புவனகிரி அருகே உள்ள தச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அபூர்வம் (70). இவர் தனக்கு சொந்தமான மூன்று பசு மாடுகள், ஒரு கன்றுக்குட்டி, ஒரு காளைமாடு ஆகியவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளார். இந்த மாடுகள் அனைத்தும் புவனகிரி அருகே கீழமணக்குடி கிராமத்தில் உள்ள வயலில் மேய்ந்துள்ளது.
வயலில் இருந்த பருத்தி மற்றும் நெற்பயிர்களை மேய்ந்ததால் அந்த நிலத்தின் உரிமையாளரான விவசாயிகள் கடும் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், வீரமுத்து, பழனிச்சாமி, மேலமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து மாடுகளைப் பிடித்து அருகில் உள்ள அம்மன் கோயில் அருகில் வைத்து மாடுகளின் காது நுனியை அரிவாளால் வெட்டி காயப்படுத்தி உள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து மாட்டின் உரிமையாளர் அபூர்வம் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப் பதிவு செய்தார்.
இதையடுத்து கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், வீரமுத்து, பழனிச்சாமி, மற்றும் மேலமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாடுகளின் காது நுனியை வெட்டி காயப்படுத்திய 4 பேர் கைது appeared first on Dinakaran.