×

மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மருதமலையில் 7 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம்

 

தொண்டாமுத்தூர்,ஆக.7: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் மலைவழிப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அடிவாரத்தில் 7 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் பார்க்கிங் வசதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினந்தோறும் நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைப்பாதையில் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே புதிய வாகன நிறுத்தும் அமைக்க, அடிவாரத்தில் உள்ள ஏழு ஏக்கர் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது. புதிதாக வாகன பார்க்கிங் அமைக்கப்படக்கூடிய இடத்தினை நேற்று முன்தினம் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் கலெக்டர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சரிடம் புறம்போக்கு நிலங்களில் ஏற்கனவே குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் வசிக்கின்ற 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து சோமையம் பாளையம் ஊராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தி இருசக்கர வாகன நிறுத்தம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தேவஸ்தான பேருந்தில் பயணித்து மலைக்கோவில் வளாகத்தை அமைச்சர் பார்வையிட்டார். கோயில் வளாகத்தில் அமைச்சரை கோயில் துணை ஆணையர் ஹர்ஷினி, அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், அறங்காவலர்கள் சுகன்யா ராஜரத்தினம், பிரேம்குமார், மகேஷ் குமார், சொக்கம்புதூர் கனகராஜ் ஆகியோர் வரவேற்றனர். மருதமலை அடிவாரத்தில் அமைச்சர் முத்துசாமியை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் தொ.அ. ரவி, மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம சண்முகசுந்தரம் உட்பட பலர் வரவேற்றனர்.

The post மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மருதமலையில் 7 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Marudamalai ,Thondamuthur ,Marudamalai Subramania Swami temple ,Dinakaran ,
× RELATED அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!