×

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 400 ஸ்மார்ட் கடைகள் நிறுவ திட்டம்: மாநகராட்சி அதிகாரி தகவல்

 

சென்னை, ஆக.7: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 400 ஸ்மார்ட் கடைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையின் பிரபல பொழுதுபோக்கு இடங்களான மெரினா கடற்கரைக்கும், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கும் வருகை தருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கடற்கரை பகுதிகளில் இயங்கும் கடைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மெரினா கடற்கரையில் 1600க்கும் மேற்பட்ட கடைகளும், பெசன்ட் நகர் கடற்கரையில் 500க்கும் மேற்பட்ட கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகளை கடற்கரையொட்டி அமைந்திருக்கும் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தான் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மெரினாவில் இயங்கி வரும் கடைகள் பொலிவின்றியும், சுகாதாரமின்றியும் இருப்பதால் இவற்றை முறைப்படுத்த மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில், கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில், மணல் பரப்பில் முறையற்று அமைந்துள்ள கடைகளை அகற்றிவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 900 வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கடைகளை இலவசமாக அமைத்து தர மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் இந்த 900 கடைகளில், 540 மட்டும் மெரினாவில் ஏற்கெனவே கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு என்றும், மீதுமுள்ள 360 கடைகளை பிற பகுதிகளை சேர்ந்த புதிய வியாபாரிகளுக்கு என்றும் ஒதுக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2020ல் பெறப்பட்டன.

அதிலிருந்து குலுக்கல் முறையில் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு உலோகத்தால் ஆன, தரமிக்க 900 ஸ்மார்ட் கடைகளை தலா ரூ.1.50 லட்சம் விலையில் மாநகராட்சி வாங்கியிருந்தது. இதற்கிடையே, மெரினாவில் ஏற்கெனவே கடை வைத்திருக்கும் 1,600 பேரும் தொடர்ந்து கடை வைக்க அனுமதிக்க வலியுறுத்தியதுடன், மீனவர் அல்லாதோர் கடற்கரையில் கடைகள் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி ஒதுக்கீடுக்கான ஆணை பெற்ற அப்பகுதி மீனவர்கள், நீண்ட காலமாக ஸ்மார்ட் கடைகளை வாங்காமல் இருந்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

இதனால் ஸ்மார்ட் கடைகள் பழுதாகி, பயனற்று ஆங்காங்கே மைதானங்களில் குப்பை குவியல் போல் கிடக்கின்றன. இதையடுத்து வாங்கிய 400 ஸ்மார்ட் கடைகளை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பயனாளிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு இலவசமாக வழங்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்கட்டமாக அடையாளம் காணப்பட்ட 365 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, பிரச்னை இல்லாமல் அமைதியான முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

*முறைப்படுத்த வேண்டும்
இந்த ஸ்மார்ட் கடைகள் சிறியதாக இருப்பதாகவும், இதனால், வியாபாரம் பாதித்து, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் பெசன்ட் கடற்கரை வியாபாரிகள், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடற்கரை பகுதி கடைகளை ஒழுங்குப்படுத்தி தர மாநகராட்சி திட்டமிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதனை, ஏற்கெனவே இருக்கும் கடைகளை கொண்டு முறைப்படுத்த வேண்டும். அதேபோல சரியான இடைவெளிகளில், சுத்தமாக பராமரிக்க திட்டமிடலாம். அதைவிடுத்து ஸ்மார்ட் கடைகள் அமைக்க நினைப்பதை ஏற்க முடியாது. அவற்றால் எங்களுக்கு பயன் இல்லை. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

*பேச்சுவார்த்தை
சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘பெசன்ட் நகரில் உள்ள வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுடன் ஸ்மார்ட் கடைகள் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடற்கரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு கலந்தாலோசித்து, சுமூகமாக இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். கடற்கரையில் ஸ்மார்ட் கடைகளை அமைப்பதற்கான இடங்களை, வியாபாரிகளுடன் சேர்ந்து தேர்வு செய்ய இருக்கிறோம். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மொத்தமாக 400 ஸ்மார்ட் கடைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் முடிவுற்ற பின்னர், ஸ்மார்ட் கடைகள் அமைப்பதற்கான தேதிகள் அறிவிக்கப்படும்” என்றார்.

The post பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 400 ஸ்மார்ட் கடைகள் நிறுவ திட்டம்: மாநகராட்சி அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Besantnagar Elliots Beach ,Chennai ,Chennai Municipal Corporation ,Besant Nagar Elliots Beach ,
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...