×

பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்க அழைப்பு

சேலம், ஆக.6: சேலம் வைஸ்ணவி பில்டர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டை செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (39). இவர், கடந்த 2016ம் ஆண்டு சேலம் புதிய பேருந்து நிலையம் சத்தியநாராயணரோடு கே.எம்.பி.தெருவில் இயங்கி வந்த வைஸ்ணவி பில்டர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை நாடியுள்ளார். அப்போது அதன் உரிமையாளரான பார்த்தசாரதி என்பவர், தங்கள் நிறுவனத்தில் பல்வேறு திட்டங்கள் இருப்பதாகவும், அதில் 100 நாட்கள் திட்டத்தில் பண முதலீடு செய்தால் 100 நாள் முடிந்த பின்பு வைப்பீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும், பணத்தை இரட்டிப்பாக கொடுக்கவில்லையென்றால், அதற்கு பதிலாக வீட்டுமனையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய விஜயகுமார், தனது பெயரில் 100 நாட்கள் திட்டத்தில் ₹8.80 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். 2018ம் ஆண்டு முதிர்வு காலம் முடிந்ததும், பணத்தை இரட்டிப்பாக பெற அந்நிறுவனத்திற்கு சென்றபோது, அந்நிறுவன உரிமையாளர் பார்த்தசாரதி மற்றும் ஊழியர்கள் பலரிடம் லட்சக்கணக்கில் முதலீடு பெற்று ஏமாற்றிவிட்டு, அலுவலத்தை மூடிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விஜயகுமார் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, வைஸ்ணவி பில்டர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பார்த்தசாரதி, அவரது மனைவி உஷாராணி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, விஜயகுமார் போல் 20 பேர் புகார் கொடுத்தனர். அதன்மூலம் ஒட்டுமொத்தமாக ₹1 கோடி அளவிற்கு மோசடி செய்தது தெரியவந்தது.

தலைமறைவான பார்த்தசாரதியை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இச்சூழலில் பார்த்தசாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். மேலும் அந்த நிபந்தனை ஜாமீனை தளர்த்த கோரிய மனுமீதான விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கொடுத்துவிடுவதாக தெரிவித்து, ₹30 லட்சத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளார். இதனால், சேலம் வைஸ்ணவி பில்டர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், இதுவரையில் புகார் கொடுக்காமல் இருந்தால், தற்போது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க போலீசாரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலத்திற்கு உரிய ஆவணங்களுடன் வந்து புகார் தெரிவிக்கலாம் என இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராசன் தெரிவித்துள்ளார்.

The post பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Vaishnavi Builders and Promoters ,Salem Economic Crime ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...