×

இந்த வார விசேஷங்கள்

தேய்பிறை அஷ்டமி 8.8.2023 – செவ்வாய்

இன்று காலை 10.31 முதல் நாளை காலை 9.33 வரை அஷ்டமி உண்டு. தேய்பிறை காலத்தில் வருவதை பைரவாஷ்டமி என குறிப்பிடுகிறோம். தேய்பிறை அஷ்டமியில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால், கிரக தோஷங்கள், கடன் தொல்லை ஆகியவை நீங்கும். நம்முடைய அச்சத்தை நீக்கி, துன்பங்களில் இருந்து நம்மை காத்தருளும் தெய்வம்தான் பைரவர். கொடிய அபாயங்கள், பகை ஆகியவை நம்மை அணுகாமல் இருக்க பைரவரை வழிபட வேண்டும்.

அவரை வழிபட வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, பரணி நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் ராகு காலம் போன்றவை ஏற்ற காலங்களாகும்.
அஷ்டமி திதி அன்று நல்ல காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம் என சொல்லப்படுகிறது. ஆனாலும், வழிபாட்டிற்குரிய திதியாக இது குறிப்பிடப்படுகிறது. ஆதிசங்கரர் அருளிய சக்தி வாய்ந்த பைரவாஷ்டகத்தை பாராயணம் செய்யுங்கள். தீராத நோயும் தீரும்.

தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே

மூர்த்தி நாயனார் மற்றும் புகழ்ச்சோழ நாயனார் குரு பூஜை
9.8.2023 – புதன்

‘‘மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்’’ – என்பது சுந்தரர் அருளிச் செய்த திருத்தொண்டத் தொகை. மூர்த்தி நாயனார் சைவ நெறி தழைக்கச் செய்த அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவர். பாண்டி நாட்டில், மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். சிவபெருமான் திருவடிகளையே தமக்குத் துணையும், பொருளும் எனக் கொண்டவர். சைவத்தில் ஆழ்ந்த பிடிப்பும், அன்பும் உடையவர். சிவபெருமானைத் தவிர வேறு எதையும் தன்னுடைய சிந்தையில் கொள்ளாத வைராக்கிய சீலர். மதுரையம்பதியில் திருக்காட்சி தரும் சொக்கலிங்கப் பெருமானுக்கு தினசரி சந்தன காப்பு சிவத்தொண்டு செய்து வந்தார்.

அப்பொழுது மதுரையில் பெரும் போர் நிகழ்ந்தது. கர்நாடக தேசத்து அரசன் பாண்டியனை வெற்றி கொண்டான். பாண்டிநாட்டின் அரசாட்சியை படை வலிமையால் கவர்ந்து கொண்டான். சமண நெறியைப் பின்பற்றிய அவன் சைவநெறியாளர்களுக்கு மிகப்பெரிய துன்பமும் சங்கடமும் செய்தான். சைவ பணிகள் செய்யவிடாது தடுத்தான். அதனை நேரடியாகச் செய்யாமல், தொண்டு செய்வதற்கு உரிய பொருள் கிடைக்காதபடி உத்தரவு போட்டான்.

மூர்த்தியாருக்கு சந்தன காப்பு பணிசெய்ய சந்தன கட்டைகள் கிடைக்கவில்லை. மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். தன்னுடைய முழங்கையையே சந்தன பாறையில் தேய்த்தார். ‘‘இப்படிப்பட்ட கொடுமையை உன்னால் தடுக்க முடியாதா?’’ என்று சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்ய, அன்று இரவே கொடுமை செய்த மன்னன் மாண்டு போனான். உடனடியாக அடுத்த அரசனைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. யானையிடம் மாலையைக் கொடுத்து அது யார் கழுத்தில் சூட்டுகிறதோ அவரை அரசராக தேர்ந்தெடுக்க நிச்சயித்தனர்.

மதுரை சொக்கநாதர் திருக்கோயிலின் முன்வந்து மூர்த்தியார் நின்று கொண்டிருந்தார். அவர் கழுத்தில் மாலை சூட்ட, சொக்கனின் திருவருளால் அவரே மன்னரானார். எந்தத் துன்பமும் இன்றி சைவத்தைப் பரப்பினார். நல்லாட்சி புரிந்த பின்னர் சிவனின் திருவடியை அடைந்தார். அவருடைய குருபூஜை இன்று. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் புகழ்ச்சோழ நாயனார். உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர். தமது தோள் வலிமையினால் போர் செய்து ஆட்சியை விஸ்தரித்தார். சைவத்தில் மிகுந்த பற்றுடையவர். இவருடைய வாழ்க்கையோடு எறிபத்த நாயனாரின் வாழ்க்கையும் இணைந்திருக்கும்.

சிவாலயங்களில் சிறந்த பூஜை நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் புகழ்ச்சோழ நாயனார். ஒரு முறை எறிபத்த நாயனார், மன்னரின் மனைவியை, சிவ பூஜைக்கு அபராதம் நிகழ்ந்ததாகக் கருதி தண்டிக்க, “இதற்குக் காரணமான தன்னை அல்லவா தண்டிக்க வேண்டும்” என்று அவரிடம் தன் வாளை எடுத்து தந்தார் புகழ்ச்சோழ நாயனார்.
சிற்றரசர்களிடம் திறை பணம் வசூலித்து அவர்களுக்கு ஆட்சி உரிமையை அந்தந்த பகுதிகளுக்குத் தந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரே ஒரு சிற்றரசன், அதிகன் என்பவன் மட்டும், திறை பணம் செலுத்தவில்லை. உடனே அவனை வென்று வருமாறு கட்டளையிட்டார். அமைச்சர்கள் சேனையுடன் அந்தப் பகுதி யை சுற்றி வளைத்தனர். சிற்றரசன் அதிகன் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அமைச்சர்கள் பல பொருள்களுடன் கொல்லப்பட்ட தலைக்குவியல்களையும் அரசன் முன் கொண்டுவந்தனர். அவ்வாறு கொண்டு வந்த தலைக் குவியல்களுள் ஒரு சிவனடியாரின் தலையும் திருநீறு பூசிய நெற்றியுடன் இருந்ததைக் கண்டு நடுங்கினார் நாயனார்.

‘‘தாம் சிவநெறி வளர்த்த அழகா இது?’’ என்று வருந்தி, தன்னுடைய புதல்வனுக்கு முடி சூட்டும் படி சொல்லிவிட்டு, தான் செய்த சிவ அபராதமாகிய பழிக்குத் தன் உயிரை மாய்த்துக் கொள்வதுதான் ஒரேவழி, என்று நெருப்பில் புகுந்தார். இவருடைய பெருமையை ‘‘பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச் சோழற் கடியேன்’’ என்று சுந்தரர் பாடுகிறார் அவருடைய குருபூஜை ஆடி கிருத்திகை நட்சத்திரம்.

ஆடி கடை வெள்ளி 11.8.2023 – வெள்ளி

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் அம்பாளை ஆராதியுங்கள். ஐந்து முகம் கொண்ட விளக்கேற்றுங்கள். நெய் விளக்கேற்றுங்கள். மாவிளக்கு போடுங்கள். அம்பாளுக்கு உகந்த செந்நிற மலர்களை சாத்துங்கள். குடும்பமாக எல்லோரும் அமர்ந்து, பூஜித்து வணங்குங்கள். ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட் முதலான மங்கலப் பொருட்களும் சேர்த்துக் கொடுப்பது நல்லது.

கணவரின் ஆயுள் பெருகும். தடைப்பட்ட மங்கல – சுபகாரியங்கள் அனைத்தும் தங்கு தடையில்லாமல் விரைவில் நிகழும். வீட்டில் தரித்திர நிலை மாறி, சகல ஐஸ்வரியங்களும் பெருகும். லலிதா சகஸ்ர நாமம் பாராயணம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். பால் பாயசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள். ரங்கத்தில் ஆடி கடைசி வெள்ளியன்று தாயாருக்கு விசேஷமான ஒய்யார நடை சேவை நடைபெறும். அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசிப்பதால் எல்லா சுப பலன்களும் கூடும். பெருமாள் அனுக்கிரகம் பூரணமாகக் கிடைக்கும்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Teipirai Ashtami ,Ashtami ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி கால பைரவர் கோயிலில் சிறப்பு பூஜைகள்