×

அதிமுகவை விமர்சிப்பவர்கள், தமிழ்நாடு அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும் :செல்லூர் ராஜு தாக்கு

சென்னை : அதிமுகவை விமர்சிப்பவர்கள், தமிழ்நாடு அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அந்த கட்சியின் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள் தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும்.

கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆனேன். அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர் ஆனேன். இன்றைக்கு அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன்.

என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துகளைநான் பொருட்படுத்துவதில்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன், எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம். தமிழகத்தில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க. தான். அதே போல் 2 கோடி தொண்டர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எனவே அ.தி.மு.க.வை விமர்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன? என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவை விமர்சிப்பவர்கள், தமிழ்நாடு அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும் :செல்லூர் ராஜு தாக்கு appeared first on Dinakaran.

Tags : Chellore Raju ,Nadu ,Chennai ,Mukha ,Tamil Nadu ,Krishman ,Selloor ,Raju Attack ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...