×

உசிலம்பட்டி அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

உசிலம்பட்டி, ஆக. 5: உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான நடுகற்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்திலுள்ள தொன்னந்தோப்பில் 2 நடுகற்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கோண்டனர்.

பின்னர் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது: இங்குள்ள ஐந்து அடி உயரம், இரண்டு அடி அகலம் கொண்ட நடுகல்லில் வீரன் ஒருவன் முன்னங்கால்களை தூக்கிய நிலையில் உள்ள குதிரையில் அமர்ந்து ஒரு கையில் கயிறு மறுகையில் வாள் ஏந்தி சண்டையிடுவது போன்றும், குதிரையின் காலடியில் வீரன் ஒருவன் தனது வாளால் குதிரையின் வயிற்றில் குத்துவது போன்றும், வீரனின் நாய் குதிரையின் அடி வயிற்றை கடிப்பது போன்றும், அதன் அருகிலேயே பெண் உருவம் தண்ணீர் குடத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஐந்து அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்ட மற்றொரு நடுகல்லில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பை செலுத்த தயாராக உள்ளது போன்றும், வீரன் அருகே பெண் உருவம் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 நடுகற்களின் மேற்பகுதியில் கோபுர வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த மோதலில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக இந்த இரு நடுகற்களும் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். மேலும் இவை 400 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம். இவ்வாறு கூறினர்.

 

The post உசிலம்பட்டி அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Usilampatti ,Kodikulam ,Usilambatti… ,
× RELATED உசிலம்பட்டி அருகே பட்டாசு வெடித்ததில் 8 பேர் காயம்