×

₹59.43 கோடியில் 16 புதிய கோர்ட் கட்டிடங்கள்

சேலம், ஆக. 5: சேலம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் ₹59.43கோடியில் 16 புதிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. பல்வேறு வசதிகளுடன் உருவாகும் இந்த கட்டிட பணிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இந்தியாவிலேயே முதன் முதலாக மாவட்ட கோர்ட் சேலத்தில்தான் அமைக்கப்பட்டது. அந்த நீதிமன்ற கட்டிடங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது சேலம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் 32 கோர்ட்டுகள் இயங்கி வருகிறது. குறிப்பாக வணிகவியல் கோர்ட், போக்சோ கோர்ட், போதை பொருள் தடுப்பு கோர்ட், மாவட்ட வாகன விபத்து கோர்ட் ஆகிய சிறப்பு கோர்ட்டுகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ₹59.43 கோடி மதிப்பில் 5 மாடி கொண்ட 8 கோர்ட்டும், மாவட்ட முதன்மை கோர்ட்டின் அருகில் 8 கோர்ட்டும் அமைக்கப்படுகிறது. தற்போது கட்டப்பட இருக்கும் கோர்ட் முழுவதும் குளுகுளு வசதி கொண்டதாக அமைகிறது. விசாரணை நடத்தப்படும் அறை முழுவதும் ஏசி அமைக்கப்படுகிறது. நீதிபதிகளுக்கு என தனி லிப்ட், பொதுமக்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்தனி லிப்ட் வசதிகளும் செய்யப்படுகிறது. கீழ் தளத்தில் இருந்து 5 தளத்திலும் பொதுமக்கள், மாற்றுதிறனாளிகள், திருநங்கைகள் என அனைவருக்கும் தனித்தனி கழிவறைகள் அமைக்கப்பட இருக்கிறது. இந்த கோர்ட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (5ம்தேதி) கோர்ட் வளாகத்தில் நடக்கிறது.

இதுகுறித்து சேலம் வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது கோரிக்கையை ஏற்று புதிய கோர்ட் கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசு ₹59.43 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வரவேற்கிறார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபுர்வாலா, அடிக்கல் நாட்டி வைத்து பேசுகிறார். மேலும், ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன், சேலம் மாவட்டத்திற்கான பொறுப்பு ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, சேலம் கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட எஸ்பி சிவக்குமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தலைமை நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபிதா நன்றி கூறுகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சேலம் கோர்ட்டிற்கு எஸ்.சி.எஸ்.டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், பொருளாதார வழக்குகளை விசாரிக்கும் டான்பிட் நீதிமன்றம், மைன்ஸ் கோர்ட், சிபிஐ கோர்ட்டுகள் வர இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post ₹59.43 கோடியில் 16 புதிய கோர்ட் கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Integrated Court ,Complex ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...