×

மக்கள் கலைஞராக மாற்றியது ராஜா சார்தான்!

நன்றி குங்குமம் தோழி

புல்லாங்குழல் இசைக் கலைஞர் அஸ்வினி

க்ளாசிக்கல் மியூஸிக்கில் புல்லாங்குழல் வாசிக்க நிறைய பெண்கள் இருக்கின்றனர். ஆனால் ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரே பெண் நான் மட்டுமே… காலரை தூக்கி விட்டுக்கொள்கிறார் பிரபல தொழில்முறை புல்லாங்குழல் இசைக் கலைஞர் அஸ்வினி. இசை குறித்துப் பேசினால் அஸ்வினி பேசிக் கொண்டே இருக்கிறார்.‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரில். பிரபல புல்லாங்குழல் இசைக் கலைஞர் டாக்டர் என்.ரமணி சாரிடம் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக்கொள்ள ஒவ்வொரு வார இறுதியும் சென்னை வர ஆரம்பித்தேன். 1998ல் தொடங்கி 2010 வரை அவர்தான் எனக்கு குரு’’ என்றவரிடம், பெண்கள் பெரும்பாலும் தொடுவது வீணைதானே.

உங்களுக்கு எப்படி புல்லாங்குழலில் ஆர்வம் என்றதற்கு..?

‘‘படிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் கலைத்துறையிலும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள் என வீட்டில் நச்சரித்தபோது, அம்மா, அப்பாவிடமிருந்து தப்பிக்க புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்கொள்கிறேன் என அசால்டாகச் சொல்லிவிட்டேன். காரணம், புல்லாங்குழல் கற்றுக்கொடுக்க ஆசிரியர் கிடைக்க மாட்டார்கள் என்பதே அப்போதைய என் எண்ணம். என் நேரம், என் ஏரியாவிலே புல்லாங்குழல் வாசிக்க கற்றுத்தரும் ஆசிரியரை அப்பா கண்டுபிடித்து அவர் முன் என்னை நிறுத்தினார்.

அவரும் புல்லாங்குழலை கொடுத்து, “ச்சும்மா ஊது, எப்படியான சத்தம் உனக்கு வருதெனப் பார்க்கலாம்” எனச் சொல்ல, “வெறும் காத்துதாங்க வருது’’… மொமென்டாகிப் போகுமோ என நினைத்தபடி நானும் ஊத ஆரம்பிக்க.. “அட, நான் ஊதுனாலும் சத்தம் வருது” என தில்லானா மோகனாம்பாள் ஜில்லு மாதிரி உற்சாகம் காட்ட… ஆசிரியரோ, “உனக்கு அழகாக புல்லாங்குழல் வாசிக்க வருது, பயிற்சி எடுத்தால், சிறப்பாகவே உன்னால் வாசிக்க முடியும்” என உற்சாகப்படுத்தினார் என்கிறார் அஸ்வினி.

‘‘என்னோட அக்கா ஏற்கனவே வயலின் வாசிப்பதால் எனக்கும் மியூஸிக் குறித்து நிறைய தெரிந்திருந்தது. அதனால் புல்லாங்குழல் எப்படி வாசிப்பது என்பது மட்டுமே எனக்கான சிந்தனையாக இருந்தது. ஆனால் ஹாபியாக ஆரம்பித்ததை புரொஃபஷனாய் கொண்டு செல்வேன் என வீட்டில் யாரும் எதிர்பார்க்கல. பதினைந்து வருடம் விடாமல் இதில் டிராவல் செய்து, சிறப்பாக நான் புல்லாங்குழல் வாசிப்பதை எல்லோரும் அங்கீகரித்த பிறகே, இதுக்கும் எதிர்காலம் இருக்கு. இதுலையும் சம்பாதிச்சு சிறப்பா வாழ முடியுமென என் பெற்றோர் நம்பவே ஆரம்பிச்சாங்க…’’ புன்னகைக்கிறார் அஸ்வினி.

‘‘முதலில் நான் டீப்பா க்ளாசிக்கல் மியூஸிக்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். முழுமையா நான் இதை செய்யலை என்கிற தேடல் அப்போது என்னிடம் இருந்தது. காரணம், க்ளாசிக்கல் மியூஸிக்கில் ஆடியன்ஸ் குறைவாக இருப்பதே காரணம். அப்போதுதான் என் கணவர் திரையிசைப் பாடல்களின் பக்கமாக கவனம் திருப்பினார். “உன் திறமைக்கு நீ க்ளாசிக்கல் மியூஸிக் மட்டும் முயற்சிக்காமல் திரைப்பட பாடல்களுக்கும் வாசி” என வியூவை மாற்றினார்.

எனது கவனம் முழுமையாக இசைஞானி இளையராஜா சாரின் பாடல்களின் பக்கம் திரும்பியது. தியரிட்டிகலாக நான் பார்த்த விஷயங்களை இளையராஜா சார் பிராக்டிக்கலாக்கி இருந்தார். நான் கற்றதை அவர் எக்ஸ்பிரிமென்ட் செய்து இசையாக்கி வைத்திருந்தார். மியூஸிக்ல அவர் பயன்படுத்தாத ஸ்டைலே இல்லை. மக்கள் கலைஞராக மாற எனக்குக் கிடைத்த சரியான வாய்ப்பு ராஜா சாரின் இசைதான். தொடர்ந்து ராஜா சாரின் பாடல்களைக் கேட்டுக் கேட்டுத்தான் திரைப்பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தேன். ரைடிங் ஆன் ராஜா சார் ஷோல்டர்’’ என்கிற அஸ்வினி, தொடர்ந்து புல்லாங்குழலில் அவரின் இசையை வாசிக்க ஆரம்பித்த பிறகே கைதட்டல்கள் அதிகமாக பார்வையாளர்களிடம் கிடைக்க ஆரம்பித்தது…

எனக்கென ஒரு அடையாளம் உருவாக ஆரம்பித்தது என்றவாறு இளையராஜாவின் இசை நுணுக்கங்களை மேலும் சிலாகிக்கிறார். ‘‘தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களை செய்ய களம் இறங்கினேன். அப்போது எஸ்பிபி சார் தமிழ், தெலுங்கு, கன்னட சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களை செய்ய ஆரம்பித்திருந்தார். அவரது கன்னட மொழி ரியாலிட்டி ஷோ குழுவில் நானும் இருந்தேன். அவருடன் இணைந்து கிட்டதட்ட 400 ஷோக்களை முடித்திருந்தேன். எஸ்பிபி சார் என்னை லேடி கிருஷ்ணாவென அழைக்கத் தொடங்கி, அவரின் மேடை கச்சேரிகளுக்கும் என்னை அழைக்க ஆரம்பித்தார். இப்படியாகத்தான் நான் மேடை கச்சேரிகளிலும் புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினேன்.

இளையராஜா சாரோடு இணைந்தும் மியூஸிக் செய்யணும் என்கிற ஆசை என் மனதிற்குள் அணையாமல் இருந்ததால், “இளையராஜா இன்சைட்” என்கிற மேடை நிகழ்ச்சி ஒன்றை ராஜா சாரின் மியூஸியன்களோடு இணைந்து பெங்களூரில் நடத்திக் காட்டினேன். அது சோல்ட்அவுட் ஷோவாக அமைந்தது. பாடல்கள் இல்லாமல் ராஜா சாரின் பேக்ரவுண்ட் ஸ்கோர்ஸில் Nothing but wind, How to name it ஆல்பங்களில் இருந்து மிகவும் கஷ்டமான பீஸ்களை எடுத்து வாசித்தோம்.

நிகழ்ச்சியை யு டியூப் வலைத்தளத்தில் பதிவேற்ற அதுவும் படு வைரலானது. நிகழ்ச்சியை பார்த்த ராஜா சார் என்னை அழைத்தார். ஆசீர்வாதம் செய்ய அழைக்கிறார் என்று நினைத்தே சென்றேன். பிறகுதான் தெரிந்தது ரெக்கார்டிங் செய்ய என்னை அழைத்திருக்கிறார் என்று. ஸ்பெஷிக் சிம்பொனி இசை ஒன்றுக்கு அவரோடு இணைந்து 4 முதல் 5 நாட்கள் தொடர்ந்து புல்லாங்குழல் வாசித்தேன்.

மானிட்டர் பார்த்து சிறப்பாக நான் வாசித்திருப்பதாக ராஜா சார் சொன்னார். ஏகலைவனாய் ராஜா சாரின் இசை கேட்டு புல்லாங்குழல் வாசித்த என்னை அவரே நேரில் அழைத்து வாசிக்கச் சொன்னதும் எமோஷன் ஆனேன். கிரேட் லெர்னிங்காக எனக்கு அது அமைந்தது. அதன் பிறகே பல தமிழ் மியூஸிஷியன்ஸ் நட்பு கிடைக்க ஆரம்பித்தது.லைட் மியூஸிக்கில் எல்லா ஸ்டைல் புல்லாங்குழலும் வாசிக்கத் தெரிஞ்சுருக்கணும். பல மாநிலங்களுக்குப் பயணித்து, பல்வேறு மியூஸிஷியன்களோடு பணியாற்றியிருக்கிறேன். ஐரிஸ் விசில், யுரோப்பியன் ரெக்கார்டர், வெஸ்டெர்ன் கன்செர்ட் புல்லாங்குழல், சைனிஷ் டிசி புல்லாங்குழல், ஜப்பானிஷ் ஷகுகாச்சி புல்லாங்குழல், கிலேயில் ஆக்ரினா புல்லாங்குழல் என பலவிதமான புல்லாங்குழல் கலெ க் ஷன்ஸ் என்னிடம் இருக்கிறது.

எனக்கென ஒரு ஸ்டுடியோ செட்டப்பை வீட்டில் அமைத்திருக்கிறேன். திரைப்படங்களுக்கும் வாசித்து வருகிறேன். 2011ல் தொடங்கி இன்றுவரை 180 படங்களுக்கு மேல் புல்லாங்குழல் வாசித்திருக்கிறேன்’’ என்றவர், உதட்டிற்குக் கீழ் புல்லாங்குழலை வைத்து ‘அஞ்சலி… அஞ்சலி… புஷ்பாஞ்சலியென வாசிக்க… அஸ்வினியின் புல்லாங்குழல் இசை நம் மனதை கரைக்கிறது.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

The post மக்கள் கலைஞராக மாற்றியது ராஜா சார்தான்! appeared first on Dinakaran.

Tags : Raja ,Kunkum Doshi ,Ashwini ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும்...