நன்றி குங்குமம் டாக்டர்
வாழ்க்கை என்பது நல்லது, கெட்டது இரண்டும் கலந்த கலவையே. இந்த இன்ப துன்ப உணர்ச்சிகளைக் கொண்ட வாழ்க்கையைப் புரிந்துகொண்டால், எப்படிப்பட்ட சூழலையும் மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான எளிய வழிகள் சிலவற்றை பார்ப்போம்.எதையும் ஏற்றுகொள்ளும் மனம்ஏதேனும் தவறோ, அசாம்பாவிதமோ நடந்து விட்டால் அதனை திருத்தி எழுத நம்மால் முடியாது. ஆனால், காலம் அதனை கடந்து போக நமக்கு வழிகாட்டும்.
எனவே, அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும். நம் மீது நம்பிக்கை வைத்து காத்திருப்பவர்கள் யார். நாம் உடைந்துவிட்டால், அவர்களின் நிலை என்னவாகும் என்றெல்லாம் சிந்தித்து, எந்த சூழலையும் திடமாக ஏற்றுக்கொள்ள மனதை பழக்கிக் கொள்ள வேண்டும். அப்போது பிரச்னைகள் வழிப்போக்கனாகவே வந்து செல்லும். அது நம் மகிழ்ச்சிக்கு எந்த விதத்திலும் தடையாக இருக்காது.
பிடித்தவற்றை செய்தல்சங்கடங்களை நினைத்து மூலையில் முடங்கி விடாமல், அதனை சரிசெய்ய தீர்வு என்ன என்பதை யோசியுங்கள். சங்கடங்கள் தீரும் வரை விடா முயற்சியுடன் முயற்சித்துக் கொண்டே இருங்கள். துக்கத்தில் இருக்கும்போது, எந்த காரியத்தையும் சரிவரச் செய்யமுடியாது. எனவே, மனதிற்கு பிடித்த விஷயங்களில் கவனத்தை திருப்புங்கள். இது நம்மை மகிழ்ச்சியான உலகிற்கு எடுத்துச் செல்லும். தெளிவான பாதை கிடைக்கும்.
மனதை ஒருநிலைப் படுத்துங்கள்
எந்த ஒரு விஷயத்தையும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதனை குறித்து ஆழ யோசித்து , அப்போதே செய்துவிடுங்கள். வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். நாளை என்று தள்ளிப்போட்டால், அது நடக்காமலே கூட போய்விடலாம். சில நிமிடங்கள், சில மணிநேரங்கள் என்று தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய வேண்டியதை செய்தால், வாழ்க்கையில் 50 விழுக்காடு பிரச்னைகள் நம்மை. கடந்துபோய்விடும்.
மகிழ்ச்சியைத் தீர்மானிக்காதீர்கள்
நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்னை இதுதான். நம்மை விட உயர்ந்த வாழ்க்கையை நினைத்து மகிழ்ச்சியை தீர்மானிப்பது. எத்தனை படிகள் ஏறிச் சென்றாலும், மீண்டும் கீழிறங்கி வந்தான் ஆக வேண்டும். அதுபோல்தான் வாழ்க்கையும். அதை நினைவில் கொண்டு, உங்களுக்குக் கீழ் இருக்கும் நபர்களை சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான் நம் வாழ்க்கை சிறப்பானதாகத் தெரியும்.
தேவையற்றவைகளை விலக்குதல்
தேவையில்லாத காரியங்களைச் சிந்தித்துக் கொண்டே இருந்தால், மனநலமே பாதிக்கும். அதனால் அவற்றை ஒதுக்கிவிட்டு, நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும் காரியங்களுக்குச் செவிசாய்க்காமல் இருப்பதே நலம்தரும்.
நல்ல நட்பு அவசியம்
நாம் உடைந்து போகும் நேரத்தில் தாங்கி பிடிக்கும் நட்பு இருந்தால், எவ்வளவு பெரிய மனவலியையும் அசால்டாக கடந்து வந்துவிடலாம். எனவே, உண்மையான நல்ல நட்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதனால், தனிமையில் தவிப்பதை எப்போதும் தவிர்க்கலாம்.என்னால் அனைத்தும் சாத்தியம் என்ற மனநிலையை உருவாக்கிக்கொண்டால், அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு திறவு கோலாகும்.
தொகுப்பு : ரிஷி
The post மகிழ்ச்சிக்கான எளிய வழிகள்! appeared first on Dinakaran.