×

திருவிடைமருதூர் அருகே களத்துமேட்டு விவகாரத்தில் இருதரப்பினர் மோதல்

திருவிடைமருதூர், ஆக. 3: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கோவில்பத்து கிராமத்தில் களத்துமேட்டு இடம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, 4 பேரை கைது செய்தனர். திருவிடைமருதூர் வட்டம், பருத்திக்குடி அருகே கோவில்பத்து கிராமத்தில் உள்ள களத்துமேட்டை, ஊராட்சி துணைத் தலைவர் முரளி (32) விலைக்கு வாங்கினார். அந்த இடத்தை பொது பயன்பாட்டுக்கு விட வேண்டும் என, சிலர் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக திருவிடைமருதூர் தாசில்தார் சுசிலா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவு எடுக்கப்படாமல், ஆர்டிஓ தலைமையில் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் முரளிக்கு சொந்தமான களத்துமேட்டில் படைத்தலைவன்குடி விஜயகுமார் (32), லோடு ஆட்டோவில் வைக்கோல் கட்டுகளை ஏற்றி வந்து இறக்கினார். அவருடன் சந்திரமோகன் (62), பாஸ்கரன் (55), கிருஷ்ணமூர்த்தி (58), ரமேஷ் (32), உலகநாதன் (55), முத்து (58), கண்ணதாசன் (60) ஆகியோர் வைக்கோல் கட்டு இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சென்ற முரளி, அவரது தம்பி பிரகாஷ், முரளியின் மனைவி நிர்மலா, தந்தை பாலு ஆகிய 4 பேரும், ‘‘எங்களது இடத்தில் ஏன் வைக்கோல் கட்டுகளை இறக்குகிறீர்கள்?’’ என கேட்டு லோடு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து விஜயகுமாரை கட்டையால் தாக்கினர். தடுக்க வந்த அதிமுக வார்டு செயலாளர் சந்திரமோகனுக்கும் அடி விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் தரப்பினர், நிர்மலாவின் சேலையை பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கினர். அப்போது தடுத்த நிர்மலாவின் மாமியார் சாந்திக்கும் அடி விழுந்தது. இந்த அடிதடியில் படுகாயமடைந்த சந்திரமோகன், நிர்மலா, சாந்தி ஆகியோர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் விசாரணை நடத்தினார். பின்னர், முரளி, அவரது தந்தை பாலு, நாகை அரசு பஸ் டிரைவர் விஜயகுமார், சந்திரமோகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post திருவிடைமருதூர் அருகே களத்துமேட்டு விவகாரத்தில் இருதரப்பினர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvidimarthur ,Thiruvidamarthur ,Govilpathu ,Thanjavur District ,Conflict ,
× RELATED சாலை விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி