×

நாடாளுமன்ற தேர்தலில் டெல்டா, தென் மாவட்டங்களுக்கு குறி அதிமுக, பாஜ கூட்டணியை வீழ்த்த வியூகம் வகுக்கும் ஓபிஎஸ், டிடிவி: சமாதானம் செய்யும் முயற்சியில் டெல்லி மேலிடம்; விரைவில் முக்கிய விஐபி சந்தித்து பேச திட்டம்

திருச்சி: நாடாளுமன்ற தேர்தலில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக-பாஜ கூட்டணியை வீழ்த்துவதற்காகவே ஓபிஎஸ், டிடிவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி, சசிகலா அணி என 4 அணிகளாக செயல்பட்டு வருகிறது. சசிகலா சிறை சென்றபின், டிடிவியை ஓரம்கட்டிய இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இரட்டை தலைமையில் ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி வந்தனர். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதலால் தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இதில் எடப்பாடிக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆதரவு அதிகமாக இருந்ததால் அவரது கை ஓங்கியது. இதையடுத்து, எடப்பாடி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையமும் அவரை அங்கீகரித்து விட்டது. இதனால், அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் அணி பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி தரப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், எடப்பாடியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று ஓபிஎஸ் அணியினர் தெரிவித்து வருகின்றனர்.

‘குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல…’ அதிமுகவில் பிளவுப்பட்டிருக்கும் 4 அணிகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் பாஜ ஈடுபட்டு வருகிறது. பாஜவின் தேர்தல் சுயலாபத்துக்காக, 4 அணி தலைவர்கள், மாஜி அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் வழக்குகளை கையில் எடுத்து அடி பணிய வைத்து வருகிறது. ஆனால், எடப்பாடியோ சசிகலா, டிடிவி, ஓபிஎஸ்சுடன் சேர மாட்டோம் என பிடிவாதம் பிடித்து வருகிறார். பாஜ மேலிடம் பலமுறை பஞ்சாயத்து செய்தும் எடப்பாடி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். சசிகலா, டிடிவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மூலம் பாஜவுக்கு ஓபிஎஸ் தூது விட்டும், அவருக்கு ஒற்றை தலைமை பதவியும் கிடைக்கவில்லை. அணிகளும் இணையவில்லை.

எடப்பாடியின் பக்கம் பெரும்பாலான எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆதரவு இருப்பதால் பாஜ எடப்பாடிக்கு முன்னுரிமை கொடுக்கிறது. இதனால் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இப்போது நடுத்தெருவில் நிற்கும் ஓபிஎஸ், எதிரியிடம் (டிடிவி) சரணடைந்து விட்டார். இதற்கு மேலும் பாஜவை நம்பி இருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று முடிவுக்கு வந்த ஓபிஎஸ், டிடிவியுடன் சேர்ந்து புதிய அணியை உருவாக்கி அதிமுக-பாஜ கூட்டணியை வீழ்த்த முடிவு செய்து உள்ளார். இதற்காக சமீபத்தில் சென்னையில் அவரது வீட்டில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணியை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தோற்கடிக்க வியூகங்களை வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகத்தான் சமீபத்தில் கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தேனியில் ஓபிஎஸ், டிடிவி இருவரும் இணைந்து போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த போராட்டம் அதிமுக-பாஜ கூட்டணிக்கு பிரச்னை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்து கொண்ட டெல்லி பாஜ மேலிடம் ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. விரைவில் பாஜ மேலிட விஐபி ஓபிஎஸ்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் நடைப்பயண தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுக்காத அண்ணாமலை, திடீரென ஓபிஎஸ்சை புகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓபிஎஸ், டிடிவி தரப்பில் கூறுகையில், ‘‘தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் சமுதாயம் சார்ந்த வாக்குகள் அதிகம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி, ஓபிஎஸ் தரப்பு சேர்ந்து போட்டியிட்டால் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி டெல்டாவிலும் அதிமுக, பாஜ கூட்டணி படுதோல்வியை சந்திப்பது நிச்சயம். அண்மையில் டெல்லியில் நடந்த பாஜ கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கும் ஓபிஎஸ்சுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது ஓபிஎஸ் தரப்பினர் இடையே கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ்சும், டிடிவியும், அதிமுக, பாஜ கூட்டணிக்கு எதிரான வியூகங்களை வகுத்து வருகின்றனர். தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் செல்வாக்கை இழந்துள்ளார். இதனை சரிக்கட்டவும், நாடாளுமன்ற தேர்தலில் தனது மகன் ஓ.பி.எஸ்.ரவீந்திரநாத்தை மீண்டும் களமிறக்கவும் முடிவு செய்துள்ளார். இதற்கு டிடிவி ஆதரவும் இருப்பதால் அதிமுகவை டெபாசிட் இழக்கச் செய்யலாம் என அவர் கணித்திருக்கிறார். சமீப காலமாக அமைதியாக இருக்கும் சசிகலாவும் தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு அவர்கள் கூறினர்.

* சசிகலா முக்கிய முடிவு
அதிமுகவில் இணைய சசிகலா பல்வேறு கட்டமாக முயற்சித்தும் அனைத்தும் கானல் நீராகவே முடிந்தது. தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணமும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் உள்ள அவர், பாஜ மூலம் காய் நகர்த்த முயன்றாராம். அதுவும் தோல்வியிலேயே முடிந்ததாம். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தான் ஓபிஎஸ்சும், டிடிவியும் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் சசிகலா முக்கிய முடிவு எடுக்கலாம் என கூறப்படுகிறது.

* படுதோல்வியே குறிக்கோள்
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து அதிமுகவுக்கு எதிராக செயல்பட துவங்கியுள்ளனர். ஆனால், இருவருக்குமே டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு உள்ளதாம். அங்கு போட்டியிடும் அதிமுக- பாஜ கூட்டணி படுதோல்வியை சந்திக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருவரும் செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக, தென் மாவட்டங்களில் உள்ள சமுதாய தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

The post நாடாளுமன்ற தேர்தலில் டெல்டா, தென் மாவட்டங்களுக்கு குறி அதிமுக, பாஜ கூட்டணியை வீழ்த்த வியூகம் வகுக்கும் ஓபிஎஸ், டிடிவி: சமாதானம் செய்யும் முயற்சியில் டெல்லி மேலிடம்; விரைவில் முக்கிய விஐபி சந்தித்து பேச திட்டம் appeared first on Dinakaran.

Tags : OPS ,AIADMK ,BJP alliance ,Delta ,districts ,DTV ,Delhi ,Trichy ,southern ,AIADMK- ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...