×

24 மணி நேரமும் குடிநீர் விநியோக திட்டத்திற்கு தேவையான விவரங்களை சேகரிக்க வரும் ஒடிசா அரசின் நீர் நிறுவனத்தின் பணியாளர்களிடம் பொதுமக்கள் தெரிவிக்கவேண்டும்: சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் திட்டச் செயலாக்கத்திற்கு தேவையான விவரங்களை, பொதுமக்கள், தங்கள் வீடுகளுக்கு விவரங்களை சேகரிக்க வருகை தரும் ஒடிசா அரசின் நீர் நிறுவனத்தின் (WATCO) பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் (CMWSSB) மற்றும் ஒடிசா மாநில நீர்க் கழகம் (Water Corporation of Odhisa (WATCO) இடையே 20.07.2023 அன்று கையெழுத்தானது. இத்திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக திட்ட மேலாண்மை ஆலோசகராக ஒடிசா மாநில நீர்க் கழகத்திற்கு (WATCO) சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் (CMWSSB) நியமிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இப்பணிகளை மேற்கொள்வதற்காக விரிவான திட்ட அறிக்கை மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் தயாரித்து வழங்கிடும் பணிகளை ஒடிசா மாநில நீர்க் கழகத்தினர் (WATCO) மேற்கொள்வார்கள். இத்திட்டத்தின்கீழ், பழுதடைந்துள்ள பழைய குடிநீர்க் குழாய்களை மாற்றியமைத்து, விடுபட்ட தெருக்களில் புதிதாக குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் மூலம், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு எண்.127 முதல் 142க்குட்பட்ட கோடம்பாக்கம், வடபழனி, மேற்கு மாம்பலம், தியாகராயர் நகர், சி.ஐ.டி நகர், சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, அசோக் நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், நெசப்பாக்கம்(பகுதி), சாலிகிராமம், விருகம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகள் மற்றும் அடையாறு மண்டலம், வார்டு எண்.168 முதல் 180க்குட்பட்ட ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், இந்திரா நகர், கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர், வேளச்சேரி, தரமணி மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு தற்போதுள்ள குடிநீர் விநியோக அமைப்பை மேம்படுத்தி 24 மணி நேரமும் குடிநீர் தங்குதடையின்றி விநியோகிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் இத்திட்டச் செயலாக்கத்திற்கு தேவையான விவரங்களை சேகரிக்கவரும் களப்பணியாளர்களிடம் விவரங்களை வழங்கி ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

The post 24 மணி நேரமும் குடிநீர் விநியோக திட்டத்திற்கு தேவையான விவரங்களை சேகரிக்க வரும் ஒடிசா அரசின் நீர் நிறுவனத்தின் பணியாளர்களிடம் பொதுமக்கள் தெரிவிக்கவேண்டும்: சென்னை குடிநீர் வாரியம் appeared first on Dinakaran.

Tags : Odisha Government Water Agency ,Chennai Drinking Water Board ,Chennai ,Godambakkam ,Addar Zones ,Dinakaran ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...