×

உலகின் குட்டி எவரெஸ்ட் கேர்ள்!

சாதனை புரிய வயது ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணமாக மத்தியபிரதேசம் பிதுல் நகரைச் சேர்ந்த பிரிஷா லோகேஷ் நிகாஜூ மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட்டை அடைந்து சாதனைப் படைத்திருக்கிறார். ஐந்து வயது ஆறு மாதங்களே ஆன பிரிஷா தனது தந்தை லோகேஷ் நிகாஜூவுடன் இணைந்து இந்த சாதனையை செய்திருக்கிறார். அடிப்படையில் மலையேறும் வீரரான லோகேஷ் நிகாஜூ மும்பையில் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். சிறு வயது முதலே அப்பாவுடன் இணைந்து ஆரம்பத்தில் வீட்டுச் சுவர்களில் ஏறிப் பழகிய சிறுமி பிரிஷா பல்வேறு பயிற்சிகள், உடல் வலிமைக்கான செயற்பாடுகள் அனைத்தும் முடித்து தன் தந்தையுடன் எவரெஸ்ட்
சாதனையை முடித்திருக்கிறார்.

மே 24ம் தேதி தன் தந்தையுடன் எவரெஸ்ட் நோக்கி பயணிக்கத் துவங்கிய பிரிஷா எவரெஸ்ட் அடித்தள கேம்பை ஜூன் 1ம் தேதி அடைந்திருக்கிறார். தொடர்ந்து பயணித்து சென்று எவரெஸ்ட் உச்சியைத் தொட இன்னும் பயிற்சிகளும், வயதும் தேவை என்பதால் லோகேஷ் தன் மகளின் பாதுகாப்புக் கருதி அடித்தளத்துடன் திரும்பச் செய்திருக்கிறார். ஆனால் அதுவே இதுவரை இவ்வளவுச் சின்ன வயதில் யாரும் தொட்டதில்லை என்பதுதான் வரலாறு. சுமார் 130கி.மீ, பயணித்தால் 5364மீ(17,598அடி) உயரத்தில் இருக்கிறது எவரெஸ்ட் பேஸ் கேம்ப். அங்கிருந்து பிரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் எங்கும் எதிலும் வைரலாகி வருகிறது. மேலும் இத்தனை சிறு வயதிலேயே பிரிஷாவிற்கு இருக்கும் ஊக்கமும், முயற்சியையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

’எங்களுடன் ஏறிய பலரும் தலைவலி, மூச்சுத்திணறல், மலையேற்ற நோய் உள்ளிட்ட பல இன்னல்களை அனுபவித்தனர். ஆனால் பிரிஷா அனைத்தையும் கடந்து உற்சாகமாக நடந்து சென்றதை இப்போதும் என்னால் மறக்க முடியாது’ என நெகிழ்கிறார் பிரிஷாவின் தந்தை லோகேஷ் நிகாஜூ. எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் இருந்து சிரித்த மழலை முகத்துடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் பிரிஷாதான் உலகின் குட்டி எவரெஸ்ட் கேர்ள் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரியாகியிருக்கிறார்.

-கவின்

The post உலகின் குட்டி எவரெஸ்ட் கேர்ள்! appeared first on Dinakaran.

Tags : Prisha Lokesh Nikaju ,Madhya Pradesh Bithul City ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...