×

அம்ரித் பாரத் திட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை ரயில் நிலையத்தில் ₹16.73 கோடியில் மேம்பாட்டு பணிகள் பிரதமர் மோடி 6ம் தேதி தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில், ஆக.3 : அம்ரித் பாரத் திட்டத்தில் நாகர்கோவில் சந்திப்பு, குழித்துறை ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் தொடங்க உள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. நேற்று ஆய்வு செய்தார்.
ரயில் நிலையங்களை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 90 ரயில் நிலையங்களில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரயில் நிலையங்களை மேம்படுத்தும் வகையில் மாஸ்டர் பிளான் திட்டம் தயாரித்து,அவற்றை செயல்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், குழித்துறை ரயில் நிலையம் ஆகியவற்றில் அபிவிருத்தி பணிகள் நடக்க இருக்கின்றன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ₹11.38 கோடியிலும், குழித்துறை ரயில் நிலையத்தில் ₹5.35 கோடியிலும் முதற்கட்டமாக மேம்பாட்டு பணிகள் செய்யப்பட உள்ளன.

ஏற்கனவே கடந்த வாரம் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்து, இந்த திட்டத்தின் கீழ் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த திட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சி வருகிற 6ம் தேதி நடக்க இருக்கிறது. பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள சந்திப்பு ரயில் நிலையத்திலும் பிரமாண்ட அகண்ட திரையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. விழாவில், மக்கள் பிரதிநிதிகள், தெற்கு ரயில்வே அதிகாரிகள், கோட்ட அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். குத்து விளக்கேற்று நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் மேடை அமைக்கப்பட உள்ளது. சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்ய உள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.

இது தொடர்பாக ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. ஈஸ்வரராவ், நேற்று நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். ரயில் நிலையத்தில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன? பயணிகள் உள்ளே வரும் பகுதி, டிக்கெட் கவுண்டர் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். பிரதமர் தொடங்க உள்ள இந்த திட்டத்தை காணும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகளும் அழைக்கப்பட உள்ளனர். பயணிகளும் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்புகள் குறித்து, ஐ.ஜி. ஆலோசித்தார். இந்த ஆய்வின் போது ரயில்வே முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் தன்வர் பிரகுல் குப்தே, உதவி கோட்ட மேலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post அம்ரித் பாரத் திட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை ரயில் நிலையத்தில் ₹16.73 கோடியில் மேம்பாட்டு பணிகள் பிரதமர் மோடி 6ம் தேதி தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Nagercoil ,Kulitura ,Amrit Bharat ,Dinakaran ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...