×

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

சிவகங்கை, ஆக.2: பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. 2023-2024ம் கல்வியாண்டிற்கான 6வயது முதல் 18வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் கண்டறிய சிறப்பு கணக்கெடுப்புப் பணி நேற்று தொடங்கியது. சிவகங்கையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அம்பிகாபதி இப்பணியை தொடங்கி வைத்தார். ஆசிரியப் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், சிறப்புப் பயிற்றுநர்கள், இயன்முறைப் பயிற்சியாளர்கள், சிறப்பு பயிற்சி மையப் பாதுகாவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தொடர்புடைய பிறதுறை அலுவலர்கள் இணைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அனைத்து ஒன்றியங்களிலும் 500க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாகவும், பள்ளிக்கு அடிக்கடி வராமல் இருந்து இடைநிற்கும் வாய்ப்பு அதிகம் உள்ள குழந்தைகளும், பள்ளியே செல்லாத குழந்தைகள், எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்கும் குழந்தைகள் ஆகியோர் குறித்து கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, மணல் குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய பல்வேறு மாநிலம், மாவட்டத்திலிருந்து தொழில் நிமித்தமாக வந்துள்ளவர்கள் வாழும் பகுதிகள், தொழிற்சாலை, மார்க்கெட் பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தும் போது அப்போது குழந்தை தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலர் மற்றும் போலீசார் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசைப் பகுதிகள் மற்றும் விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளை உடனடியாக அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : cella ,Sivagangai ,School Cella Children ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி