×

நாளை ஆடிப்பெருக்கு விழா பழநி அருகே மாட்டு சந்தை தொடங்கியது

பழநி, ஆக.2: பழநி அருகே தொப்பம்பட்டியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று மாட்டு சந்தை துவங்கியது. பழநி அருகே தொப்பம்பட்டியில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாட்டு சந்தை நேற்று துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இச்சந்தையில் கலந்து கொள்ள திருச்சி, மணப்பாறை, கம்பம், தேனி, காங்கேயம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாடு விற்பனையாளர்களும், மாடு வாங்கும் விவசாயிகளும் தொப்பம்பட்டியில் குவிந்து வருகின்றனர்.

மாட்டு சந்தையில் ரூ.10 ஆயிரம் துவங்கி ரூ.2 லட்சம் வரையிலான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மாட்டு சந்தைக்கு வழக்கத்தை விட கூடுதலான அளவில் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தவிர, சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, சங்கு, சாட்டை, மூக்கணாங்கயிறு போன்றவையும் விற்பனை செய்யவும் ஏராளமான கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி கண்ணன் கூறுகையில், மாட்டு வண்டிகளில் பயன்படுத்தும் காங்கேயம் காளைகள், கரவை மாடுகள் ஆகியவை ஏராளமான அளவில் தொப்பம்பட்டி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். மாடுகளின் வளர்ச்சி மற்றும் அதன் வயதைப் பொறுத்து விலை தீர்மானிக்கப்படுகிறது. நல்ல மாடுகள் விற்பனை செய்யும்போது, விவசாயிகள் போட்டி போட்டு விலையை உயர்த்தி வாங்குவதால், மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இந்த ஆண்டு மாடுகளை விற்பனை செய்ய அதிக அளவிலானோர் வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாளை ஆடிப்பெருக்கு விழா பழநி அருகே மாட்டு சந்தை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Palani ,Adiperku festival ,Thoppampatti ,Dinakaran ,
× RELATED பழநி தொப்பம்பட்டியில் விவசாய பண்ணைகளில் அதிகாரிகள் களப்பார்வை