×

300 ஆண்டுகளாக 6 தலைமுறைகளின் தயாரிப்பு: திருப்பதி கோயிலில் மணக்கும் ஜடேரி நாமக்கட்டி; புவிசார் குறியீடு கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் 450க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 55 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்தது. தற்போது திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஜடேரி நாமக்கட்டி, நெல்லை செடி புட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு நேற்று முன்தினம் கிடைத்துள்ளது. இவற்றையும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 7 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படும் நாமக்கட்டிக்கு இம்முறை புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இந்த கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நாமக்கட்டி தயாரிப்பதை குடிசை தொழிலாகவே சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகின்றனர். அதன்படி தொடர்ந்து 5 முதல் 6 தலைமுறையினர் வரை நாமக்கட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். நாமக்கட்டி தயாரிப்பதற்காக இயற்கையாகவே இப்பகுதி வெண்பாரை நிறைந்த சுண்ணாம்பு மண்ணை அளித்துள்ளது. வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் சிறு, சிறு துண்டுகளாக உடைக்கப்படும். பின்னர், ஆலையில் அரைத்து நீர் சேகரிக்கும் தொட்டியில் கரைக்கப்படும்.

தொடர்ந்து, கீழே மென்மையாக படிந்திருக்கும் நாமக்கட்டி மாவினை பக்குவமாக பிரித்து நீளமாக தட்டி எடுத்து நாமக்கட்டியாக வெயிலில் காயவைத்து பாக்கெட் செய்து தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஜடேரி நாமக்கட்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் இங்கு தயாராகும் நாமக்கட்டிகள்தான் சப்ளை செய்யப்படுவதாக மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

பெரும்பாலும் வெயில் காலங்களில் மட்டும் நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இதனை சேமித்து வைப்பதற்காக சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கிடையில் ஜடேரி கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த 2019ம் ஆண்டு ஜடேரி(திருமண்) நாமக்கட்டி தயாரிப்பாளர் சங்கத்தை பதிவு செய்தனர். இச்சங்கத்தின் மூலம் ஜடேரி நாமக்கட்டிக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை மற்றும் அனுமதியோடு புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பித்தனர். ஒன்றிய அரசு அதிகாரிகள் பல கட்ட ஆய்வுக்கு பின் ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இதையறிந்த கிராமமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

* சுண்ணாம்பு மண்ணை இலவசமாக அள்ள அனுமதிக்க வேண்டும்
நாமக்கட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ‘வரும் செப்டம்பர் 18ம் தேதி புரட்டாசி மாதம் தொடங்குகிறது. இதையொட்டி நாமக்கட்டி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இங்குள்ள குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான நாமக்கட்டிகளை உற்பத்தி செய்து வருகிறோம். இவைகள் ஏஜென்டுகள் மூலம் சென்னை, திருச்சி, ரங்கம், திருப்பதி என பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கட்டி தயாரிப்பதற்காக அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து ஒரு டிராக்டர் சுண்ணாம்பு மண் ரூ.5,300க்கு வாங்குகிறோம்.

மேலும் தனியார் நிலங்களில் உள்ள மண்ணை அள்ளவும் வருவாய்த்துறை அனுமதி தேவை. இதுதவிர ஆட்கள் கூலி உள்ளிட்டவை கணக்கிடப்பட்டால் ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாமக்கட்டி ஏற்றுமதி மூலம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை மட்டுமே லாபம் கிடைக்கிறது. எனவே புறம்போக்கு நிலத்தில் உள்ள சுண்ணாம்பு மண்ணை குறிப்பிட்ட அளவு இலவசமாக அள்ளி பயன்படுத்த அரசு ஏற்பாடு செய்தால் மேலும் லாபம் கிடைக்கும். மேலும், எங்களது நீண்ட நாள் கோரிக்கையான நாமக்கட்டிகள் சேமித்து வைக்க கிடங்கை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றனர்.

The post 300 ஆண்டுகளாக 6 தலைமுறைகளின் தயாரிப்பு: திருப்பதி கோயிலில் மணக்கும் ஜடேரி நாமக்கட்டி; புவிசார் குறியீடு கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Jaderi Namakkatti ,Tirupati Temple ,India ,Tamil Nadu ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்