×

கூடுவாஞ்சேரியில் 120 படுக்கை வசதிகளுடன் நவீன மகளிர் விடுதி: அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி- நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் உள்ள சார் – பதிவாளர் அலுவலகம் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை ஒட்டியபடி ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் 4 மாடி கொண்ட கட்டிடம் நவீன முறையில் 120 படுக்கை அறை வசதிகளுடன் மகளிர் விடுதி உள்ளது. இதனை கடந்த மாதம் 13ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று மாலை திடீரென வந்து ஆய்வு செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த மகளிர் விடுதியில் அரசு பணி புரியும் பெண்கள் மட்டுமல்லாமல், தனியாரிலும் பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள், இன்டர்வியூக்கு வருபவர்கள் என அனைவரும் தங்கிக்கொள்ளலாம்.

இதில் 2 பேர் தங்கும் படுக்கை அறையும், 4 பேர் தங்கும் படுக்கை அறையும் உள்ளது. இதில் நாள் கட்டணம் மற்றும் மாத கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது. இங்கு ஏசி, வாஷிங் மெஷின் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளன. வீட்டில் எப்படி அனைத்து வசதிகளும் உள்ளதோ, அதேபோல் இங்கும் அனைத்து வசதிகளும் உள்ளன. இதில், சிசிடிவி கேமராக்கள் வசதிகள் உள்ளதால் இங்கு தங்கும் பெண்களுக்கு பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். தற்போது, 5 பெண்கள் மட்டுமே தங்கி உள்ளனர். எனவே, இதனை ஒரு நல்ல வாய்ப்பாக கருதி பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார். அப்போது, அமைச்சருடன் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, துணை தலைவர் லோகநாதன், சமூக நலத்துறை ஆணையாளர் அமுதவல்லி, அலுவலர் சங்கீதா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணம் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

The post கூடுவாஞ்சேரியில் 120 படுக்கை வசதிகளுடன் நவீன மகளிர் விடுதி: அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Minister ,Geetha Jeevan ,Guduvancheri ,Chengalpattu district ,Guduvancheri- Nellikuppam road… ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...