கூடுவாஞ்சேரி: அரசு, தனியார் பேருந்துகளில் செய்யப்படும் ராட்சத விளம்பரங்களால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, கோயம்பேடு, மாதாவரம், பிராட்வே, கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உட்பட பல்வேறு பகுதிகளில் மாநகர பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இதில் அனைத்து பேருந்துகளிலும் தனியாருக்குச் சொந்தமான விளம்பரங்கள் பேருந்துகளின் இரு பக்கவாட்டிலும் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டுள்ளன.
இதனால் அந்த பேருந்துகள் தனியார் பேருந்துகளா? அல்லது அரசுப் பேருந்துகளா? என்பது தெரியாமல் பேருந்து பயணிகள் குழம்பிப்போய் உள்ளனர். இதுகுறித்து பேருந்து பயணிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், சமீப காலமாக அனைத்து பேருந்துகளிலும் தனியாருக்குச் சொந்தமான சிமென்ட், கம்பி, தங்க மாளிகை, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்கள் குறித்த ராட்சத ஸ்டிக்கர்கள் பேருந்துகளில் இரு பக்கவாட்டிலும் ஒட்டப்பட்டு வருகின்றன.
இதனால் எது தனியார் பேருந்து? எது அரசுப் பேருந்து என்பது தெரியாமல் குழப்பமாக உள்ளது. இதில் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும்போது, அங்கு வரும் பேருந்துகளின் முன் பக்கத்திலும், பின்பக்கத்திலும் உள்ள பெயர் பலகைகளை பார்த்து பேருந்தில் ஏறுவதற்குள் அந்த பேருந்துகளை எடுத்து விடுகின்றனர். மேலும் ஆங்காங்கே உள்ள பேருந்து நிலையங்களுக்குச் சென்று அலைந்து திரிந்து பேருந்துகளை கண்டுபிடித்து ஏறுவதற்குள் கடும் அலைச்சல் ஏற்படுகிறது.
இதற்கு முன்பு மாநகரப் பேருந்துகள், அரசுப் பேருந்துகள், விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் என அந்தந்த பேருந்துகளுக்கென்று வர்ணம் பூசப்பட்டு பேருந்து கழகத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இதனைப் பார்த்து எந்த ஊருக்குச் செல்கின்ற பேருந்துகள் என்று எளிதில் கண்டுபிடித்து பயணம் செய்தோம்.
ஆனால் தற்போது பேருந்துகள் முழுவதிலும் தனியாருக்குச் சொந்தமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதால் எந்த பேருந்து எங்கு செல்கிறது என்பது தெரியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளோம். எனவே இதுகுறித்து தமிழக அரசு தலையிட்டு அனைத்து பேருந்துகளிலும் உள்ள விளம்பரங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
The post அரசு, தனியார் பேருந்துகளில் செய்யப்படும் ராட்சத விளம்பரங்களால் பயணிகள் குழப்பம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.