×

உலக சந்தைக்கு ஈடாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களை பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் கலெக்டர் தர் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஆக.1: மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களை பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் என்று கலெக்டர் தர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (ஸ்டார்ட்அப் தமிழ்நாடு) மகளிர் திட்டம் இணைந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் கை வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருட்களை உலக சந்தைக்கு விற்பனை செய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கலெக்டர் தர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டத்தினை கலெக்டர் தர் துவக்கி வைத்து, சுயஉதவி குழுவினரிடையே பேசியதாவது: தமிழ்நாடு அரசு சுய உதவி குழுவினர் பல்வேறு தொழில்கள் புரிந்து அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் வங்கிகள் மூலமாக கடனுதவிகள் வழங்கி வருவதன் அடிப்படையில் சுய உதவி குழுக்கள் மாநிலத்தின் பொருளாதாரத்தில் சிறப்பான பங்கினை ஆற்றி வருகின்றன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து உலக சந்தைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ மேற்கொண்டு வருகிறது. அத்திட்டங்களை அனைத்து சுய உதவி குழுவினரும் பயன்படுத்தி உங்களுடைய உற்பத்தி பொருட்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து சுய உதவி குழுக்களும் குறுகிய வட்டத்திற்குள் நின்று விடாமல் பெரும் தொழில் நிறுவனங்களாக மாற்ற முன்வர வேண்டும். அதற்கான பயிற்சிகள் அளிப்பதற்கு ஸ்டார்ட் அப் பெரும் உதவியாக இருக்கும். எனவே இந்த கருத்தரங்க முகாமில் கலந்து கொண்டுள்ள சுய உதவிக்குழுக்கள் அனைவரும் உங்களுடைய விற்பனையை விரிவாக்கி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் பேபி ஜாண், திருநெல்வேலி மண்டல ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அலுவலர் ராகுல், இணை அலுவலர் ஜிஜின் துரை, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் லெட்சுமி காந்தன், 80-க்கும் அதிகமான சுயஉதவி குழுவினர், மகளிர் திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக சந்தைக்கு ஈடாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களை பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் கலெக்டர் தர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Collector ,Dar ,-Help Groups ,Nagarko, ,Groups ,Kannyakumari ,Collector Dar ,
× RELATED அரசு, தனியார் தொழிற்நிலையங்களில்...