×

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் தனியார் இ-சேவை மையங்களில் ஆதார் கார்டு எடுக்கும் வசதி: அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: புதிய ஆதார் கார்டு எடுக்கும் வசதியை அரசு அனுமதியுடன் இயங்கும் தனியார் இ-சேவை மையங்களில் அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள, செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் இ-சேவை மையம் உள்ளது. இதில், புதிதாக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எடுக்கும் வசதி உள்ளது. ஆனால், அரசு அனுமதியுடன் இயங்கி வரும் தனியார் இ-சேவை மையங்களில் இந்த வசதி கிடையாது.

எனவே, அரசு அனுமதியுடன் இயங்கி வரும் தனியார் இ-சேவை மையங்களில் மேற்படி கார்டுகளை எடுக்கும் வசதியை ஏற்படுத்தி தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘அரசு அலுவலகங்களில் இயங்கி வரும் இ-சேவை மையங்களில் தினந்தோறும் 30 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 15 டோக்கன்களுக்கும், மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை 15 டோக்கன்களுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், மதியம் ஒரு மணி முதல் மாலை 3 மணி வரை உணவு இடைவேளை விடப்படுகிறது.

இதற்காக தொலை தூரத்தில் உள்ள கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள் காலை 6 மணி முதல் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருக்கின்றனர். இதில், இரண்டு அல்லது மூன்று பேருந்துகளை பிடித்து வரவேண்டும். இதில், டோக்கன் கிடைத்தால் மட்டுமே புதிதாக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை எடுக்க முடியும். டோக்கன் கிடைக்காவிட்டால் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்ல வேண்டும். இதில், புதிதாக ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிக்கும்போது ஒரு வயது முதலே ஆதார் கார்டு கட்டாயம் என்கின்றனர்.

பிறப்பு சான்று வைத்தாலும் நிராகரிக்கின்றனர். 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே புதிதாக ஆதார் கார்டு எடுக்க முடியும். 5 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆதார் கார்டு எடுக்க முடியாது என்று அந்தந்த அலுவலகங்களில் துண்டு பிரசுரத்தை சுவரொட்டியில் ஒட்டி உள்ளனர். மேலும், வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் புதியதாக ஆதார் எடுக்கும் வசதி இருந்தும் அங்கும் இதே நிலைமைதான் நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் நாள்தோறும் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் அரசு அனுமதியுடன் இ-சேவை மையம் தொடங்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்தார்.

அதன்பேரில், கிராமப்புறங்களில் அரசு அனுமதியுடன் தனியார் இ-சேவை மையங்கள் இயங்கி வருகிறது. இதில், புதிதாக ஆதார் எடுக்கும் வசதி, ஆதார் திருத்தம், முகவரி மாற்றம், ஆதாரில் போன் நம்பர் இணைத்தல் உள்ளிட்ட சேவைகள், வாக்காளர் அடையாள அட்டை எடுக்கும் வசதிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், ஒன்றிய அரசு மூலம் இயங்கி வரும் இ-சேவை மையங்களில் மட்டுமே பான் கார்டு எடுக்கும் வசதி உள்ளது. இதனால், அரசு இ-சேவை மையங்களுக்கு கை குழந்தைகளுடன் பள்ளி மாணவர்கள் உட்பட நாள்தோறும் பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதில், சில நேரங்களில் ெதாழில்நுட்ப பிரச்னையால் குறித்த நேரத்தையும் கடந்து காத்திருந்து ஆதார் பதிவு செய்ய ேவண்டி உள்ளது. இதனால், பலர் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில், அரசு அனுமதியுடன் இயங்குவதும் தனியார் இ-சேவை மையங்களில் மேற்படி வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் பொதுமக்களின் சிரமத்தை போக்க முடியும். எனவே, ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் இ-சேவை மையங்களுடன், தமிழக அரசின் இ-சேவை மையங்களில் இணைத்து புதிய ஆதார் கார்டு எடுக்கும் வசதி, போன் நம்பர் இணைத்தல், ஆதார் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு எடுக்கும் வசதிகளை அரசு அனுமதியுடன் இயங்கும் தனியார் இ-சேவை மையங்களில் அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

The post காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் தனியார் இ-சேவை மையங்களில் ஆதார் கார்டு எடுக்கும் வசதி: அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kathankolathur Union ,Goduwancheri ,Aadhaar ,Kathankankolathur Union ,Dinakaran ,
× RELATED போலி ஆதார் கார்டு தயாரித்து...