×

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் டிசம்பர் 26ம்தேதி மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் இதுவரையில் 158 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர். இதில் ஏற்கனவே 21 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கடந்த 10ம்தேதி சிபிசிஐடி போலீசார், புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 4 சிறுவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் மற்றும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் என 4 சிறுவர்களுக்கும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் வெள்ளனூர் காவல் நிலைய குழந்தைகள் நலக்குழு அலுவலர் ஆகியோரின் மேற்பார்வையில் பெற்றோர்கள் முன்னிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

இதில் டிஎன்ஏ பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள், சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு சிபிசிஐடி போலீசார் அனுப்பினர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இதில் வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணையிட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆணையம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்தது. ஆணையத்தின் இடைக்கால அறிக்கை நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை செப்.14-க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vengai Valley ,Chennai ,ICourt ,Venkaivyal ,Vengaivyal ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...