×

கிளாம்பாக்கத்தில் இன்று ஆய்வு; நவீன பேருந்து நிலைய திறப்பு தேதியை முதல்வர் அறிவிப்பார்: தலைமை செயலாளர் தகவல்

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பகுதியில் ரூ393.74 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன பேருந்து நிலைய இறுதிக் கட்ட பணிகளை இன்று காலை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர், அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதும், திறப்பு தேதியை முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என தலைமை செயலாளர் தகவல் தெரிவித்தார். சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வண்டலூர் அருகே ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் உள்ள கிளாம்பாக்கம் பகுதியில் 110 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலத்தை சென்னை சிஎம்டிஏ நிர்வாகம் கையகப்படுத்தி, அங்கு ரூ393.74 கோடி மதிப்பில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கடந்த 2019ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இப்பணிகள் 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

இப்பணிகளை அவ்வப்போது அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு, இறுதிக்கட்ட பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இப்பேருந்து நிலையத்தில் 226 புறநகர் பேருந்துகளும், 164 அரசு பேருந்துகளும், 62 ஆம்னி பேருந்துகளும் வந்து நின்று செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இங்கு பேருந்துகள் நிற்பதற்கு 8 மிகப்பெரிய நடைமேடைகள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிடம், மழைநீர் வடிகால்வாய் வசதி, குடிநீர், கழிவறை மற்றும் மருத்துவமனை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், இப்பேருந்து நிலையத்துக்குள் 100 கடைகள், 4 உணவுக்கூடங்கள் மற்றும் 4 ஓய்வறைகள் உள்ளன. இங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட காவல் நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இறுதிகட்ட பணிகள் நடைபெறும் நவீன பேருந்து நிலையத்தை இன்று காலை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் சிஎம்டிஏ நிர்வாக முதன்மை செயலாளர் அபூர்வா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் காவல் ஆணையரக கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் நிருபர்களிடம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய நுழைவுவாயிலின் முன் ரூ6 கோடி மதிப்பில் புதிதாக மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்படுகிறது. அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பின்னரே, பேருந்து நிலைய திறப்புக்கான தேதியை தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பார் என்று உறுதி தெரிவித்தார்.

The post கிளாம்பாக்கத்தில் இன்று ஆய்வு; நவீன பேருந்து நிலைய திறப்பு தேதியை முதல்வர் அறிவிப்பார்: தலைமை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Clambake ,Chief Secretary ,Kuduvanchery ,Klambakkum ,Klambakum ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை