×

நெல்லை காங். தலைவர் மரணம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: உடனடியாக விசாரணை துவங்கியது, உடல் கிடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

நெல்லை: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் அவரது உடல் கிடந்த இடத்தில் நேற்று ஆய்வு நடத்தினர். நெல்லை மாவட்டம், திசையன்விளை கரைச்சுத்துபுதூரைச் சேர்ந்த கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த 2ம் தேதி மாயமானார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து ஜெயக்குமார் எழுதி வைத்ததாக கூறப்படும் நபர்கள் குறித்து குடும்பத்தினர், உறவினர்கள். நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர. எனினும் 21 நாட்கள் ஆகியும் எவ்வித துப்பும் துலங்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில், ஜெயக்குமார் மர்ம மரணம் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து வழக்கின் முதல் தகவல் அறிக்கை, ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் நெல்லை மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி இதுகுறித்து மர்ம மரணம் என (குற்ற எண் 2/2024) வழக்குப்பதிந்துள்ளார். முதற்கட்டமாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பிகள் சிவகுமார், ராஜ்குமார் நவ்ரோஜ் ஆகியோரது தலைமையில் இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் போலீசார் கரைசுத்துப்புதூர் சென்று அவரது உடல் கிடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.

தடயவியல் துறை உதவி இயக்குநர் ஆனந்தி தலைமையிலான தடயவியல் துறையினரும் வந்து ஏற்கனவே சிக்கிய தடயங்கள் குறித்து விளக்கமளித்தனர். கடந்த ஒரு வாரமாக மழை பெய்ததால் பல இடங்களில் மண் நிரம்பியிருந்தது. மண்வெட்டியால் தோண்டி பார்த்தனர். இந்த ஆய்வு மாலை வரை நடந்தது. கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதி, வீடு, வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதிகளையும் பார்வையிட்டனர்.

வி.ஏ.ஓ ஜெயக்குமார், கிராம உதவியாளர் ராஜகோபால் ஆகியோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் தோட்ட காவலாளி முருகன், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். மேலும் ஜெயக்குமாரின் மரண வாக்குமூல கடிதங்களில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி, மீண்டும் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

The post நெல்லை காங். தலைவர் மரணம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: உடனடியாக விசாரணை துவங்கியது, உடல் கிடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nellie Kong ,CBCID ,Nellie ,Nellie Congress ,Jayakumar ,DGP ,Shankar Jiwal ,KPK ,Nellai District ,Vektianvilai Karaichuthuputur ,Nellai Cong ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் மர்ம...