×

கனிமொழி, திருமாவளவன் பேட்டி: மணிப்பூரில் அமைதி திரும்ப உடனடி நடவடிக்கை தேவை

புதுடெல்லி: மணிப்பூரில் நேரடி கள நிலவரத்தை ஆய்வு செய்ய 2 நாள் பயணமாக சென்ற இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த 21 எம்பிக்கள் குழு நேற்று மாலை டெல்லி திரும்பியது. இக்குழுவில் இடம் பெற்றிருந்த திமுக எம்பி கனிமொழி டெல்லி விமானநிலையத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: மணிப்பூர் மக்கள் மீது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது அங்கு சென்று பார்த்த பின்னர் தெரிந்தது. மணிப்பூரில் எங்கும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால் அமைதியாக இருப்பதுபோல் தோற்றமளிக்கிறதே தவிர, இன்னமும் மணிப்பூரில் ஆங்காங்கே வன்முறை நடந்து கொண்டிருக்கிறது.

மணிப்பூரில் பாலியல் கொடுமையை சந்தித்த இரு பெண்களை சந்தித்தோம். அப்போது அவர்கள், தங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர் வன்முறை கும்பலிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்கு மீண்டும் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எதிர்காலம் குறித்த பயமும் அவர்களிடம் உள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் நேரடியாக பார்த்த விஷயங்களை நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்து, விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

குழுவில் இடம் பெற்றிருந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: மணிப்பூரில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றன. மெய்டீஸ், குக்கி என இரு சமூக மக்களும் ஒன்றிய, மாநில அரசுகள் மீதான வருத்தத்தை வெளிப்படுத்தினர். குக்கி சமூக மக்கள் இனிமேல் தங்களால் மெய்டீஸ் சமூக மக்களோடு சேர்ந்து வாழ இயலாது என்றும், மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்று தங்குவதற்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறினர். இதேப்போல் மெய்டீஸ் சமூக மக்கள் துச்சத்பூர் மாவட்டத்திலிருந்து வெளியேறிவிட்டோம் என தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post கனிமொழி, திருமாவளவன் பேட்டி: மணிப்பூரில் அமைதி திரும்ப உடனடி நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Manipur ,New Delhi ,India Coalition Party ,Lingua ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி