×

பாதுகாப்பான விடுதிகளை தேடி பெண்கள் இனி அலைய வேண்டாம்: தோழி திட்டம் பாதுகாப்பாக பார்த்து கொள்ளும்; தமிழ்நாடு அரசின் தங்கும் விடுதிக்கு பெண்கள் பாராட்டு

புதிய மாவட்டங்களுக்கு பணி நிமித்தமாக செல்லும் பெண்கள் இனி பாதுகாப்பான விடுதிகளை தேடி அலைய வேண்டாம். அவர்களை ‘தமிழ்நாடு அரசின் தோழி எனும் தங்கும் விடுதி’ பாதுகாப்பாக பர்த்துக்கொள்ளும். அரசின் இந்த திட்டத்துக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், புதுமைபெண் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அரசின் திட்டத்தால் மாதம் ஒன்றுக்கு ரூ.888 பஸ் கட்டணத்தை சேமிக்கின்றனர். இது, திட்டக்குழுவின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்காக புதுமைப்பெண் திட்டம் மூலமாக உயர்க்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கிராமங்களில் இருந்து நகரம் வரை உள்ள அரசு பள்ளி மாணவிகள் தற்ேபாது உயர்கல்வி படிக்க காரணமாக இருப்பது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த திட்டம் தான். மேலும், பெண்களுக்கான மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலமாக குடும்ப தலைவிகளுக்கு வரும் செப்.15ம் தேதி முதல் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நடைமுறைக்கு வர உள்ளது.

இதன் மூலமாக ஒரு கோடி நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்ப தலைவிகள் பயனடைவார்கள். இவற்றின் தொடர்ச்சியாக தற்போது ‘தோழி’ எனும் பெயரில் தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 9 மாவட்டங்களில், பணிபுரியும் பெண்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் வரும் நாட்களில் அடுத்தடுத்து கூடுதல் விடுதிகளும் திறக்கப்பட உள்ளன.

வாடகையோடு 1 மாத வாடகைத் தொகை அளவுக்கு, முன்கூட்டியே காப்புத் தொகை கொடுத்து மாணவிகள் சேர்ந்துகொள்ளலாம். ஒரு நாள் முதல் 15 நாட்களுக்குக் குறுகிய காலமாகவும் தங்கிக் கொள்ளலாம். தனி அறை தொடங்கி ஆறு பேர் வரை தங்கக்கூடிய அறைகள் வரை இங்கு உள்ளது. தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது techexe@tnwwhcl.in என்ற இ-மெயில் முகவரிக்கு இமெயில் அனுப்பி, கூடுதல் விவரங்களை அறியலாம். சென்னையில் உள்ள பிற பெண்கள் விடுதிகள் குறித்து முழுமையாக அறிய https://chennai.nic.in/hostel/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். முழுமையான விவரங்களுக்கு: http://tnwwhcl.in என்ற இணையதளத்தைக் க்ளிக் செய்து, விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய தகவல்களைப் பெறலாம்.

என்னென்ன வசதிகள் உள்ளன?
புதிய படுக்கைகள், தூய்மையான கழிப்பறைகள், சிசிடிவி கேமராக்கள், விடுதி கண்காணிப்பளர், வை-பை, வாசிங் மிசின், பிரிட்ஜ், அயர்ன் பாக்ஸ் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளன. மேலும் பெண்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறையும் பின்பற்றப்படுகிறது. வேலை தேடி வெளியூரில் இருந்து வரும் பெண்களுக்கு முதலில் தேவை பாதுகாப்பாக தங்கும் இடம் தான். அறிமுகம் இல்லாத நகர்புறங்களுக்கு முதன்முதலாக வரும்போது சரியான விடுதிகளை கண்டு பிடிப்பது என்பது சவாலான ஒன்று. அந்த கவலை இனி இல்லை நவீன வசதிகளுடன் பாதுகாப்பான முறையில் தோழி விடுதி அமைந்துள்ளது, என பெண்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தோழி விடுதியில் தங்கி பணிபுரியும் பெண் ஒருவர் கூறுகையில் வசதிகள், பாதுகாப்பு என அனைத்தும் தரமான முறையில் உள்ளது. ஆனால் கட்டணத்தை பொறுத்தவரையில் அதிகமாக இருக்கிறது. உணவுடன் சேர்த்தால் இன்னும் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனை கொஞ்சம் குறைத்தால் குறைந்த வருமானத்தில் பணிபுரியும் என்னை போன்ற பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சென்னை மாவட்டத்தில் அடையாறில் , 2வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகரில் தோழி பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. சென்னை தோழி விடுதியில் ஒருவர் தங்கும் அறை, 2 பேர், 4 பேர், 6 பேர் தங்கும் அறைகள் என மொத்தம் 98 படுக்கை வசதிகள் உள்ளன.

* செங்கல்பட்டு மாவட்டத்தில், எண்‌.6, 4வது தெரு, டிபென்ஸ்‌ காலனி, நெல்லிக்குப்பம்‌ ரோடு (சார்‌ பதிவாளர்‌ அலுவலகம்‌ அருகில்‌), நந்திவரம்‌, கூடுவாஞ்சேரி- 603 202 என்ற முகவரியில் தோழி விடுதி இயங்கி வருகிறது.

* கூடுவாஞ்சேரி தோழி விடுதியில் இருவர் தங்கும் அறை (ஏசி, ஏசி அல்லாத அறைகள் ), 4 பேர் தங்கும் அறைகள் என மொத்தம் 120 படுக்கை வசதிகள் உள்ளன.

* பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட 9 நகரங்களிலும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் முகவரிகளையும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்தும், https://www.tnwwhcl.in/ என்ற இணைய முகவரியில் விரிவாகக் காணலாம்.

The post பாதுகாப்பான விடுதிகளை தேடி பெண்கள் இனி அலைய வேண்டாம்: தோழி திட்டம் பாதுகாப்பாக பார்த்து கொள்ளும்; தமிழ்நாடு அரசின் தங்கும் விடுதிக்கு பெண்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Tamil Nadu Govt ,
× RELATED இணையவழி சூதாட்டம் தடை...