×

திருச்சி எம்பி தொகுதியில் குஷ்பு போட்டி?

திருச்சி: திருச்சி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை கட்சிகள் இப்போதே துவக்கி விட்டன. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ, இந்த முறை வேலூர், தென்சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருச்சி உள்ளிட்ட 10 தொகுதிகளை குறிவைத்து பணிகளை துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் திருச்சி தொகுதியில் நடிகை குஷ்புவை களமிறக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஷ்பு பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். அதோடு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் அவர் திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. ஏனெனில் 30 ஆண்டுகளுக்கு முன் குஷ்பு முன்னணி நடிகையாக இருந்த போது, திருச்சி மண்டையூர் அருகே அவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டினர்.

எனவே திருச்சி தொகுதி சாதகமாக இருக்கும் என்று அவர் நம்புகிறாராம். எனவே குஷ்பு திருச்சியை குறி வைக்கிறாராம். திருச்சி கிடைக்காதபட்சத்தில் தென்சென்னையில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பாஜ வட்டாரத்தில் விசாரித்த போது, எந்த தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பது கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு. கட்சி என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதை குஷ்பு நிறைவேற்றுவார் என்றனர்.

The post திருச்சி எம்பி தொகுதியில் குஷ்பு போட்டி? appeared first on Dinakaran.

Tags : Khushbu ,Trichy MP ,Trichy ,Khushpu ,Trichy Lok Sabha ,BJP ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...