×

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழநி ரோப்கார் சேவையில் பாதிப்பு

பழநி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப்கார் சேவையில் நீண்ட நேரம் பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மலைக்கோயிலுக்கு செல்ல தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப்கார், மேற்கு கிரிவீதியிலிருந்து வின்ச் இயக்கப்படுகிறது. ஆடி மாதம் என்பதால் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால், அவ்வப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் ரோப்கார் சேவை தொடங்கியது. 2 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு செல்லநீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதற்கிடையே ரோப்கார் நிலையத்துக்கு செல்லும் மின் இணைப்பில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் அதனை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இணை ஆணையர் மாரிமுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மேலும் மின் பொறியாளர்கள் மற்றும் ரோப்கார் ஊழியர்கள் அங்கு வந்து பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மாலை 4.30 வரை பிரச்னைக்கு தீர்வு காண இயலவில்லை என்பதால் ரோப்கார் இயக்கப்படவில்லை. இதனால் ரோப்காரில் செல்ல டிக்கெட் எடுத்தவர்கள், டிக்கெட் எடுக்க காத்திருந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். அதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில், படிப்பாதை மற்றும் வின்ச் மூலம் பக்தர்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின் மாலை 4.30 மணிக்கு மேல் ரோப்கார் இயக்கப்பட்டு பக்தர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

The post தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழநி ரோப்கார் சேவையில் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Palani Robcar ,Palani ,Palani hill temple ,Dindigul district ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...