×
Saravana Stores

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

546. குஹ்யாய நமஹ (Guhyaaya Namaha)

ஒரு ஊரில், ஒரு குருவும் சிஷ்யனும் வாழ்ந்து வந்தார்கள். அந்த சிஷ்யனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. “ஏன் கடவுளைக் கண்களால் பார்க்க முடிவதில்லை, அப்படிப் பார்க்க முடிந்தால் அனைவரும் கடவுளை ஏற்பார்கள் அல்லவா! கடவுளை ஏற்பவர், மறுப்பவர் என இரு பிரிவுகளே இருக்காதே’’ எனக் குருவிடமே கேட்டார் அந்த சிஷ்யன். அதற்கு விடையளித்த குரு, “பூவின் வாசனையை உன்னால் கண்களால் பார்க்க முடியுமா, உன்னால் நுகர மட்டுமே முடியும். மூக்கைத் தவிர வேறு எந்த புலனாலும் பூவின் வாசனையை உறுதி செய்ய முடியாது. இருந்தும், பூக்களுக்கு வாசனை இருக்கிறது என நம்புகிறாய் அல்லவா. இதற்கு மற்றொரு உதாரணம் சொல்கிறேன், ஓர் இசையைக் கேட்க மட்டுமே முடியும். இசையைத் தொடவோ, நுகரவோ முடியாது. இருந்தும், காது கொடுத்துக் கேட்பதை வைத்தே இசையை நம்மால் அனுபவிக்க முடிகிறது.

ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலனை வைத்தே, ஒரு பொருளின் இருப்பை உறுதி செய்து, அது இருப்பதாக ஏற்கிறோம். இந்த நிலையில், ஐம்புலன்களைக் கொண்டு நம்மால் ஒன்றை அறிய முடியவில்லை என்பதால் மட்டுமே, அது இல்லை எனக் கூறவும் முடியாது’’ எனச் சொன்னார் குரு. சிஷ்யனோ, “இறைவனை ஐம்புலன்களாலும் உணர முடியவில்லையே, இதை எப்படிப் புரிந்துகொள்வது’’ எனக் கேட்டார். குரு, “இதற்கும் சில உதாரணம் உள்ளது’’ எனக் கூறினார்.

நம் கண்களால் குறிப்பிட்ட அளவு தான் பார்க்க முடியும். VIBGYOR என்ற ஒளிக் கற்றைகள் வரை மட்டுமே பார்க்க முடியும். அதைக் கடந்து Infra-Red Rays, Ultra Violet Rays ஆகியவற்றை எல்லாம் நம் கண்களால் பார்க்க முடியாது. அதற்காக இது எல்லாம் இல்லை எனக் கூற முடியுமா. அதற்கான கருவியைக் கொண்டு நம்மால் பார்க்க முடியும் அல்லவா.

நம் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதால், நம்மால் எதையும் மறுக்கவும் முடியாது. நம் காதுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சத்தத்தை மட்டுமே கேட்க முடியும், அதற்காக அதற்கு மிகுந்த ஒலி எதுவுமே இல்லை எனக் கூற முடியாது. நம் ஐம்புலன்கள் ஓரளவுக்கு உட்பட்டவை, அதை கடந்து நம்மால் உணர முடியாது. பகவானின் திருமேனி சுத்த சத்வ மயமானது. உலகியலுக்கு அப்பாற்பட்டது, பஞ்ச உபநிஷத் மயமானது. நமது உடல் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது. பகவானை நம் கண்களால் பார்க்க முடியுமா, இறைவனைக் காண நம் கண்களுக்கு சக்தி இல்லை.

இறைவனைக் காண என்ன வழி எனக் கேட்டால், பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணபிரான் விஸ்வரூபம் எடுத்துக் காட்டினான். ஆனால் அர்ஜுனனால் அதை உடனே பார்க்க முடியவில்லை. திவ்யமான தெய்வீகமான பார்வையைத் தருகிறேன், அதைக் கொண்டு என் திருமேனியைப் பார் எனக் கூறினான் கண்ணபிரான். பின்தான் அவனால் பகவானைத் தரிசிக்க முடிந்தது.

ஒரு Virus-ஐ நம் கண்களால் பார்க்க முடியாது, ஒரு விஞ்ஞானி தன் கருவியின் துணை கொண்டு பார்த்து உறுதி செய்தால் நாம் ஏற்கிறோம் அல்லவா, அதைப்போல பகவானைக் காண உபநிஷத், வேதங்களைக் கற்றுத் தேறிய மகான்களான ரிஷிகள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் தங்கள் தெய்வீகக் கண்களால் இறைவனைக் கண்டு இப்படித்தான் இறைவன் இருக்கிறான் எனக் கூறினால், அதைக்கொண்டு நாம் பகவானை ஏற்கவேண்டும்.

அவர்கள் காட்டிய வழியில் பகவானை நாம் வணங்கினால், வைகுண்டம் சென்று தெய்வீகக் கண்களைப் பகவானிடமே பெற்று நேரே பரவாசுதேவனைத் தரிசிக்கலாம்.எனவே இப்படிச் சாதாரணக் கண்களால் காண முடியாதபடி மறைந்திருப்பதால் திருமால் குஹ்ய என்று அழைக்கப் படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 546-வது திருநாமம்.“குஹ்யாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், புரியாத புதிர்களுக்கும் நமக்கு விடை கிடைக்கும்படி திருமால் அருள்புரிவார்.

547. கபீராய நமஹ (Gabheeraya Namaha)

ஒரு ஊரில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனது தந்தை நல்ல ஆசார சீலர். அவர் தனது துணிகளைத் தானே துவைத்து ஆகாசக் கொடியில் காய வைத்து மறு நாள் மடி வஸ்திரமாக உடுத்துவார். ஒரு நாள் சிறுவன் மடித் துணி மீது விழுப்புத் துணியை போட்டுவிட்டான். தந்தையோ இப்படி மடி வஸ்திரம் முழுவதும் விழுப்பாக மாறிவிட்டதே என வருந்தினார். இதைச் சிறுவனும் கவனித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் விழுப்புத் துணி மீது மடி வஸ்திரத்தைப் போட்ட சிறுவன், இப்பொழுது அனைத்தும் மடி வஸ்திரமாக மாறிவிட்டதே, இனிமேல் வருத்தப்படத் தேவையில்லை தந்தையே எனக் கூறினான். இதைக் கேட்ட தந்தை, தூய பொருள் மீது தூய்மையில்லாத பொருள் பட்டால், தூய பொருள் தான் தூய்மை குறைந்து போகும். தூய்மையற்ற பொருள் தூய்மை பெறாது. விழுப்புத் துணியை எதன் மீது போட்டாலும் விழுப்பாகத் தான் போகுமே தவிர அது மடி ஆக முடியாது எனக் கூறினார்.

சிறுவன் அது எப்படி எனக்கு புரியவில்லையே எனக் கூறினான். இதைக் கவனித்த ஓரு பெரியவர், தூய்மையான பொருள் மீது தூய்மையில்லாத பொருள் பட்டால், தூய்மையில்லாத பொருளில் இருக்கும் தீய குணம் தான் எளிதாக பரவும். அதனால் தூய்மை குறைந்து தான் போகும். தீய குணங்கள் மற்றும் தீய எண்ணங்கள் பரவும் வேகத்தில் நல்லது பரவாது. இது தான் உலக இயல்பு என்றார். பாலுடன் விஷத்தைக் கலந்தாலும், விஷத்துடன் பாலைக் கலந்தாலும், அனைத்தும் விஷமாகத் தானே ஆகும் என்றார்.

சிறுவனோ, எப்படித்தான் ஓரு பொருளைத் தூய்மை படுத்துவது என வினவினான். தேய்த்தாங்கொட்டை போன்ற பொருள்களைக் கொண்டு இன்னொரு பொருளைத் தூய்மைப் படுத்தமுடியும். ஆனால் தூய்மைப் படுத்தும் பொருள் மாற்றம் அடைந்துவிடும் என்றார் பெரியவர்.தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரு பொருளை தூய்மைப் படுத்துவது என்பது சாத்தியமா எனக் கேட்டான். ஒரே ஒருவனுக்கு மட்டும் இது சாத்தியம். அவன் தான் பகவான் நாராயணன், அவனும் அவனது அடியார்களும் தங்களைப் போலவே மற்றவர்களையும் தூய்மையாக்க வல்லவர்கள் என்றார் பெரியவர்.

பல பாபங்கள், தோஷங்கள் கொண்ட நாம் பகவானிடம் வருகிறோம். நமது தோஷங்கள் அவனைத் தீண்டுவதில்லை, மாறாக அவனது தூய்மை நம்மிடமும் வந்து சேர்ந்து விடுகிறது. தன் பாதுகையான சடாரியை நம் தலையில் வைத்து மீண்டும் தன் திருவடியில் சேர்த்துக் கொள்கிறான். ஆனால் சடாரியின் தூய்மை இதனால் என்றும் குறைவதில்லை. மாறாக நமக்கு சடாரியின் மூலமாகத் தூய்மையைத் தருகிறான். இதுதான் தான் பகவானின் இயல்பு என்று விளக்கினார்.இப்படித் தான் மாறுதல் அடையாமல் நம்மைத் தூய்மைப் படுத்தும்படி காம்பீரியம் மிக்கவராக இருக்கும் திருமால் கபீர என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 547-வது திருநாமம்.“கபீராய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நாம் எப்போதும் தூய்மையாக இருக்கும்படி திருமால் அருள்புரிவார்.

(தொடரும்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Tags : Anantan ,Kunkum ,Anmikam ,Namaha ,Ananthan ,
× RELATED மண்ணீரல் குறைபாடு… உஷார்!