×

காஞ்சிபுரம் கோயில்களில் தரிசனம் செய்து திரும்பியபோது கார்- கம்பெனி பஸ் நேருக்குநேர் மோதி தந்தை, மகன் நசுங்கி பலி

*4 பேர் படுகாயம் *நெமிலி அருகே கோர விபத்து

நெமிலி : தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த நிஜாமுதீன் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்(55). இவர் தனது மகன் அவினாஷ்(20) மற்றும் உறவினர்கள் நரசிங்(42), ரமேஷ்(40), கங்காதர் ரெட்டி(45), பத்ரிநாத்(22) ஆகியோருடன், காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய காரில் வந்துள்ளார். பின்னர், கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு 6 பேரும் அரக்கோணம் நோக்கி நேற்று புறப்பட்டனர். தொடர்ந்து, நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே நேற்று மதியம் 12.30 மணி அளவில் வந்தபோது, எதிரே தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் கம்பெனி பஸ் மீது எதிர்பாராதவிதமாக இவர்களது கார் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

மேலும், காரில் பயணம் செய்த வெங்கட் ரெட்டி, அவரது மகன் அவினாஷ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நரசிங், ரமேஷ், கங்காதர், பத்ரிநாத் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும், பஸ்சில் வந்த தொழிலாளர்கள் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இந்த கோர விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்ஜீவுலு, லோகேஷ், சங்கர், குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, பொதுமக்களின் உதவியுடன் காரில் படுகாயங்களுடன் இருந்த நரசிங் உட்பட 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சை மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தில் பலியான வெங்கட், அவினாஷ் ஆகியோரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post காஞ்சிபுரம் கோயில்களில் தரிசனம் செய்து திரும்பியபோது கார்- கம்பெனி பஸ் நேருக்குநேர் மோதி தந்தை, மகன் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Nemily ,Nemili ,Telangana State, Hyderabad ,Nizamuddeen ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...