ஊத்துக்கோட்டை: பூரிவாக்கம் கிராமத்தில் பழுதடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் பூரிவாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அவர்கள் படிக்கும் அங்கன்வாடி மையக்கட்டிடம் மிகவும் பழுதடைந்தும் மேற்கூரைகள் சேதமடைந்தும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2015-2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வர்தா புயலால் இதன் மேற்கூரைகள் பெயர்ந்துவிட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனுகொடுத்தனர். மேலும் அங்கன்வாடிமைய கட்டிடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் உடைந்துபோன சிமெண்ட் ஓட்டின் கீழே ஆபத்தான நிலையில் மாணவ-மாணவிகள் படிக்கும் நிலை இருந்தது. மீதமுள்ள ஓடுகள் எப்போது வேண்டுமானாலும் மாணவர்களின் மீது விழுமோ என்ற அச்சத்துடன் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். எனவே பழைய ஓடுகளை அகற்றி புதிய ஓடுகள் போடவேண்டும் அல்லது சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து அதிகாரிகள் ஓடுகளை மட்டும் மாற்றி சீர் செய்தனர். ஆனால் சுவர்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை அகற்றி விட்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பழுதடைந்த அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.
