*மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
வில்லியனூர் : புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு ஏரிக்கரையில் கோயிலில் கலசங்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோர்க்காடு ஏரி பகுதியில் உள்ளே பாலமுருகன் கோயில் உள்ளது.
நடமாட்டம் குறைந்து காணப்படும் இக்கோயிலில் விசேஷ நாட்களில் மட்டுமே பொதுமக்கள் வருவர். இந்நிலையில் தினசரி பூஜைகளை கோயில் பூசாரி கந்தன் மேற்கொண்டு வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர், மறுநாள் காலை பூசாரி கந்தன், கோயிலுக்கு சென்றபோது வெளியிலிருந்த கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயிலுக்கு அருகில் சென்று பார்த்தபோது கோயில் கலசம் உடைக்கப்பட்டு சிதறி கிடந்தது.
இதில் சில பாகங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து கோயில் நிர்வாகி வைத்தியநாதனுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவர், கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் கோயில் மூலவர் கலசம் உடைக்கப்பட்டு, அதில் சில பாகங்கள் திருடு போனது தெரியவந்தது. மேலும் கோயிலின் கொடிமர கலசங்கள் மற்றும் கோயில் வெளிப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருடர்கள் உடைத்து எடுத்து சென்றுள்ளனர். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு இக்கோயிலில் உள்ள பஞ்சலோக முருகன் சிலை திருடு போனது குறிப்பிடத்தக்கது.
The post வில்லியனூர் அருகே பரபரப்பு கோயில் கலசத்தை உடைத்து கொள்ளை appeared first on Dinakaran.