×

ஊட்டியில் சுற்றித்திரிந்த 16 தெரு நாய்கள் சிக்கின

 

ஊட்டி, ஜூலை 27: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதி, ஏடிசி, சேரிங்கிராஸ், பஸ் நிலைய பகுதி என பல இடங்களிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிந்து வந்தன. இவை அவ்வப்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். மேலும் நகரில் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சியை வலியுறுத்தி வந்தனர்.

நகராட்சி ஆணையர் ஏகராஜ் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் ஸ்ரீதர் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் டாக் டிரஸ்ட் அமைப்புடன் இணைந்து ஊட்டி நகராட்சிக்குட்பட்ட நொண்டிமேடு, லவ்டேல் சந்திப்பு, ஸ்டீபன் சர்ச் அருகே, மார்கெட் பகுதி, ஒல்டு ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 16 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. இவை வாகனத்தில் ஏற்றப்பட்டு இனபெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டன.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊட்டி நகரில் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த தெருநாய்களை டாக் டிரஸ்ட் அமைப்பின் உதவியுடன் பிடிக்கப்பட்டன. இதற்காக நகராட்சி மூலம் அந்த டிரஸ்ட்டிற்கு ஒரு நாய்க்கு இவ்வளவு என நிதி வழங்கப்படும். பிடிக்கப்பட்ட நாய்களுக்கு ஏடிசி எனப்படும் இனபெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீண்டும் அப்பகுதியிலேயே விடுவிக்கப்படும்’’ என்றனர்.

The post ஊட்டியில் சுற்றித்திரிந்த 16 தெரு நாய்கள் சிக்கின appeared first on Dinakaran.

Tags : Ooty ,ATC ,Charingcross ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...